என்பிஏ (NBA) லீக் இல் இருக்கின்ற ஒரே கனடிய அணியாக விளங்கும் டொரொன்டோ ராப்டர்ஸ் (Toronto Raptors) அணியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இருந்து மசாய் உஜிரி (Masai Ujiri) விலகியுள்ளார் என ESPN செய்தி வெளியிட்டுள்ளது.
மசாய் உஜிரி 2013ஆம் ஆண்டு ராப்டர்ஸ் அணியின் நிர்வாகத்தில் இணைந்தார். அவரின் தலைமையில், அணியின் வரலாற்றிலேயே முதல் முறை 2019ஆம் ஆண்டு NBA சாம்பியன் பட்டத்தை வென்றது.
அவருக்கு தற்போது ஒப்பந்தத்தின் கடைசி வருடம் மட்டுமே மீதமுள்ளது. இவரது விலகல் குறித்து அதிகாரப்பூர்வமாக டொரொன்டோ ராப்டர்ஸ் குழுமம் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை.
உஜிரி வரும் முன், ராப்டர்ஸ் அணி ஐந்து வருடங்களாக பிளே ஆப் சுற்றுகளுக்கு செல்லாமல் இருந்தது. ஆனால் அவர் வந்த பிறகு, 8 முறைகள் பிளே ஆப் சுற்றுகளில் கலந்து கொண்டு, 9 சுற்றுகளைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.