15.4 C
Scarborough

உள்நாட்டு விசாரணை பொறிமுறையை தமிழர்கள் நம்பவில்லை!

Must read

இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் எவரும் நம்பவில்லை. ஆதலால்தான் இந்த விடயத்தில் சர்வதேசப்பொறிமுறையை அவர்கள் கோரினார்கள். எனவே, சர்வதேசத்தின் இறுக்கமான நியமங்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவேண்டும் -இவ்வாறு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் ட்ரக் தெரிவித்துள்ளார்.

ஆணையாளர் வோல்கர் ட்ரக், கடந்த 23ஆம் திகதி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். தனது பயணத்தின் இறுதி நாளான நேற்று மாலை ஊடகவியலாளர்கள் சந்திப்பையும் நடத்தியிருந்தார்.

“இலங்கையின் போர்க் குற்றங்கள் மற் றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் நான் செம்மணி மனிதப்புதைகுழிக்குச் சென்றிருந்தேன். அந்தப் புதைகுழி கடந்த கால ஆட்சியின் கோரத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அந்தப் புதைகுழியைப் பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டதால், இலங்கை அரசாங்கத்துக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன்.

பல நாடுகள் பல ஆண்டுகளாக போர், உள்நாட்டு ஆயுத மோதல்கள் அல்லது அடக்குமுறையை அனுபவித்துள்ளன. சில நாடுகள் உண்மையான நல்லிணக்கத்தை அடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் மற்றும் உரிமைகள் மீது கவனம் செலுத்தப்படுவது இதற்கு அவசியம். அத்தகைய நடவடிக்கையை நாங்கள் இலங்கையிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.” – எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களும் தண்டிக்கப்படுவது அவசியம். நினைத்துப்பார்க்க முடியாத வலியையும் இழப்பையும் சந்தித்த பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்துக்கு இது இன்றியமையாதது. அரசாங்கம் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாக்க முனையக்கூடாது.

எதற்கும் வழிவகுக்காத அல்லது அதன் பரிந்துரைகள் ஒருபோதும் செயற்படுத்தப்படாத ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைகள், பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிர்ச்சியை அதிகரிக்கும். நீதி கிடைக்காவிட்டால் அமைதி நிலவமாட்டாது. மாறாக, உண்மையை ஒப்புக் கொள்வதும் ஆற்றுப்படுத்துவதும் மிகவும் அவசியமானது.

இலங்கை ஒரு முக்கிய தருணத்தில் உள்ளது. இது ஒரு புதிய அத்தியாயமாகவும் புதிய வாய்ப்பாகவும் இருக்கலாம். இந்தத் தருணத்தில் இலங்கையின் கைகளில் கண்ணாடியொன்றை நாங்கள் ஒப்படைக்கின்றோம். பல சுயபரிசீலனைகளுக்கு அது அவசியம் -என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article