அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இஸ்ரேல் – ஈரான் போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று நேரடி தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த நிலையில், ஈரான ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தோம். சமீபகால பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பதற்றத்தை தணிப்பது, அமைதி பேச்சுவார்த்தை, ராஜதந்திர முயற்சிகள் மூலம் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஈரானில் தங்கியிருந்த இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி மேற்கொள்ளப்பட்டது’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டு குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த துறைமுகத்தில் இந்திய தரப்பில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இஸ்ரேலுடனும் இந்தியாவுக்கு மிக நெருங்கிய உறவு நீடிக்கிறது. பாதுகாப்பு, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.