11.1 C
Scarborough

முதியோர் ஆரோக்கியமாகவும், சுதந்திரமாகவும் இருக்க ஒன்ராறியோ $7 மில்லியன் நிதி ஒதுக்கீடு! 

Must read

முதியோர் சமூக ரீதியாக இணைக்கப்பட்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை ஆதரிக்க, வரலாற்று ரீதியான சமூக திட்டங்களுக்கும், முதியோர் செயல்பாட்டு மையங்களுக்கும் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் ஆதரவளிக்கிறது.

முதியோரைப் பாதுகாக்க ஒன்ராறியோ அரசாங்கம் இவ்வாண்டு $7 மில்லியன் நிதியை முதலீடு செய்கிறது. முதியோர் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், சமூக ரீதியாக இணைக்கப்படுவதற்கும் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஸ்காபரோ தொகுதியில் Frontline Community Centre உள்ளிட்ட ஐந்து சமூக செயல்பாட்டு மையங்கள் சுமார் $125,000 நிதியுதவியைப் பெறுகின்றன. இந்த மானியத்தை உத்தியோகபூர்வமாக வழங்குவதற்கான ஆவண ரீதியான பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன.

மாகாணம் முழுவதும் 330 இற்கும் மேற்பட்ட சமூகத் திட்டங்களை அரசாங்கம் ஆதரிக்கிறது. முதியோர் சமூக மானியத் திட்டம் (SCGP), முதியோரின் சுதந்திரத்தை அதிகரிக்கவும், சமூக தனிமைப்படுத்தலைக் குறைக்கவும், நேர்மறையான தொடர்புகளை உருவாக்கவும்  உதவும் வகையில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஒன்ராறியோ முதியோர் மாதத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஆதரவு இம்மாதம் வழங்கப்படுகிறது.

பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான எமது அரசாங்கம், எங்கள் முதியோரைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளது. இதன்மூலம் முதியோருக்கு நம்பகமான சமூக ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதிலும் பெருமை கொள்கிறது” என்று முதியோர் விவகார, அணுகுமுறை அமைச்சரும் ஸ்காபரோ வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரேமண்ட் சோ தெரிவித்தார்.

முதியோர் சமூக மானியத் திட்டம் எங்கள் மாகாணத்தின் ஒவ்வொரு இடத்திலும், முதியோர் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், உடல் தகுதி பெறுவதற்கும், குழுவாக செயல்படுவதற்கும், அவர்களின் அயலவர்களுடனும், நண்பர்களுடனும் தொடர்பில் இருப்பதற்கும், ஒரு முக்கியமான உயிர்நாடியாக இருக்கிறது” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முதியோர் சமூக மானியத் திட்டத்தின் மூலம் உதவி பெறுவோர் உள்ளூர் திட்டங்கள், சேவைகள், நிகழ்வுகளை நடத்த தலா $25,000 வரை பெறமுடியும். இது முதியோர் தொடர்பான தன்னார்வத் தொண்டு மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த ஆண்டு முதியோர் நலன்காக்க கூடுதலாக $1 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பின்வரும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

* யோர்க் பிராந்தியத்தில் அத்தியாவசிய சமூக நிகழ்ச்சிகளுடன் கிராமப்புற முதியோரும் பங்குகொள்ளும் வகையில் கட்டணமில்லா, வசதியான பேருந்து சேவை உள்ளடக்கம்.

* இளைஞர்களுடன் முதியோர் இணைந்து தொடர்ச்சியான கலைப் படைப்புக்களை முன்னெடுக்கவும், மார்க்கத்தில் அவர்களின் கலைப் படைப்புக்களைக் காட்சிப்படுத்தவும் ஒத்துழைத்தல்

* கிழக்கு ஒன்ராறியோவில் ஒரு தொழில்முறை கலைஞரின் தலைமையில் வாராந்திர கலைப் பட்டறைகள், கண்காட்சிகளை முதியோருக்கு வழங்குதல்

* வடக்கு ஒன்ராறியோவைச் சுற்றியுள்ள பின்தங்கிய கிராமங்களில் டிஜிட்டல் கல்வியறிவு, நல்வாழ்வு கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல்

வீட்டிற்கு அருகிலுள்ள நிகழ்வுகள், செயல்பாடுகள் ஆகியவற்றுடன் முதியோரை இணைக்கும் சேவைகளுக்கான அணுகுமுறையை அதிகரிக்கவும் ஒன்ராறியோவில் 400 இற்கும் மேற்பட்ட முதியோர் செயல்பாட்டு தங்குமிட மையங்களை (SALCs) விரிவுபடுத்துகிறது.

முதியோர் செயல்பாட்டு மையங்கள் முதியேரின் நல்வாழ்வு, தொடர்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன. அத்துடன் முதியோரை தங்கள் சமூகங்களுக்குள் சுறுசுறுப்பாகவும், சுதந்திரமாகவும், ஈடுபாட்டுடனும் வைத்திருக்க உதவுகின்றன.

அத்துடன் 2025-26 ஆம் ஆண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் 100 இற்கும் மேற்பட்ட முதியோர் செயல்பாட்டு வாழ்வியல் கண்காட்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கிறது. இது முதியோர் சமூகத்தில் தங்களுக்குள்ள ஆதரவு மற்றும் வளங்களைப் பற்றி அறிய அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.

65 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 2.8 மில்லியனாக இருந்தது. இது மக்கள்தொகையில் 18.4 சதவீமாகும். இந்த எண்ணிக்கை 2046 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் அல்லது 20.3 சதவீதமாக கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article