19.6 C
Scarborough

என் பெயரும் சேர்க்கப்பட்டது பெரிய கவுரவம்: ஆண்டர்சன் பெருமிதம்!

Must read

இங்கிலாந்து – இந்தியா இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் இனி ‘ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி’ என்று அழைக்கப்படும் என பெயர் மாற்றப்பட்டதில் சச்சின் போன்ற லெஜண்டுடன் என் பெயரையும் சேர்த்து நீண்ட கால இந்திய-இங்கிலாந்து டெஸ்ட் மரபில் என்னை இணைத்திருப்பது பெருமையும், கவுரவமும் அளித்திருப்பதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

16 வயதில் உயர்தர கிரிக்கெட்டில் நுழைந்த சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,921 ரன்களை எடுக்க, ஜேம்ஸ் ஆண்டர்சன் 188 டெஸ்ட் போட்டிகளில் 704 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து 35 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியுள்ளனர். 2006-2012 வரை ஜேம்ஸ் ஆண்டர்சனும் சச்சின் டெண்டுல்கரும் 14 முறை களத்தில் நேரடியாகச் சந்தித்துள்ளனர். ஆண்டர்சன் டெண்டுல்கரை 9 முறை வீழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக ஆண்டர்சன் கூறும்போது, “காலம் பறக்கிறது. லங்காஷயருக்காக இப்போது ஆடுகிறேன். நான் 50 விக்கெட்டுகளை எடுக்கும் போது இப்போது ஆடும் வீரர்கள் யாரும் பிறந்திருக்க மாட்டார்கள். எனக்கு மிகவும் அதிசயமாக இருக்கிறது, காலம் ஓடுகின்றது.

சச்சின் டெண்டுல்கருடன் என் பெயரையும் இணைத்து கோப்பை அறிவிக்கப்பட்டிருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை, நான் வளரும் காலங்களில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கை பார்த்து அவரைப்பற்றிய பிம்பத்துடன் தான் வளர்ந்து வந்தேன்.

கிரிக்கெட்டின் முழுமுதல் லெஜண்டாகத்தான் நான் அவர் ஆட்டத்தைப் பார்த்து வந்திருக்கிறேன்.. அவருடன் நிறைய ஆடியிருக்கிறேன், எனவே அவர் பெயருடன் என் பெயரும் சேர்க்கப்பட்டு டிராபிக்கு பெயர் வைத்திருப்பது பெரிய கவுரவம். இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்?

நிறைய பெரிய நினைவுகள் என்னிடம் உள்ளன. இந்தியாவுக்கு எதிராக ஆடுவதை எப்போதும் பெரிய அளவில் விரும்பியிருக்கிறேன். ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர்கள் எதிர்நோக்குவது இந்தியாவுக்கு எதிரான தொடரைத்தான். இந்தியாவில் கடினமான காலங்களை எதிர்கொண்டுள்ளேன். இந்தியாவில் ஆடுவது கடினம். அங்கு வென்றதும் என் வாழ்க்கையில் பெரிய தருணமே. இங்கிலாந்திலும் எங்கள் இருவருக்குமிடையே கடும் சவாலான போட்டிகள் நடந்துள்ளன.

இந்தத் தொடரிலும் சவாலில் மாற்றமிருக்காது, ஆனால் இந்திய அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கில் கேப்டன், ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டனர். இருப்பினும் இப்போதிருக்கும் அணியும் வலுவான அணியே. நல்ல உற்சாகம்தரும் வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்து ஒரு விதத்தில் ஆக்ரோஷமாக ஆடும் அணி, ஆகவே சவால் நிறைந்த தொடராக இது இருக்கும். ” இவ்வாறு கூறினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article