தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் கனடாவிற்கு முதல் முறையாக வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும் விதமாக ஜூன் 15 முதல் 17 வரை அல்டாவின் Kananaskis இல் பிரதமர் கார்னி, G7 உச்சிமாநாட்டை நடத்தவுள்ளார்.
இம்மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரலை கனடா வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவை உச்சிமாநாட்டிற்கு அழைக்கும் முடிவை அரசாங்கம் ஆதரிக்கிறது. மாநாட்டின் பிரதான நோக்கங்களாக, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வெளிநாட்டு தலையீடு மற்றும் நாடுகடந்த குற்றங்களை எதிர்கொள்ளுதல் அத்துடன் காட்டுத்தீயிற்கு எதிரான நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும் என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது.
மேலும் உச்சிமாநாட்டில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், முக்கியமான கனிமங்களுக்கான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை துரிதப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில் கனடா கவனம் செலுத்தும் என்றும் அவரது அலுவலகம் கூறுகிறது.
இதைவிட, உக்ரைனில் நீடித்த அமைதியை எவ்வாறு உறுதி செய்வது மற்றும் நம்பகமான கூட்டாளர்களுடன் கூட்டணிகளை உருவாக்குவது பற்றி விவாதிக்க G7 நாடுகளுக்கு வெளியேயும் விருந்தினர்களுக்கான அழைப்பைப் பயன்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வன்கூவர் அருகே நடந்த ஒரு படுகொலை தொடர்பில் இந்தியா – கனடா உறவில் சற்று விரிசல் நிலை ஏற்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் அழைப்பு விடுத்ததாக கார்னி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அத்துடன் உக்ரைன், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.