ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, திம்பிரிகஸ்யாய பகுதியில் வைத்தே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினவால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியொன்று கடந்த செவ்வாய்கிழமை கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இது தொடர்பான விசாரணை வேட்டைக்கு மேலும் 4 பொலிஸ் குழுக்களும் நியமிக்கப்பட்டன.
இந்நிலையில் மேற்படி துப்பாக்கியின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவென கூறப்படும் நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் உறவினர்களாவர். இவர்களில் ஒரு பெண், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் நண்பியெனக் கூறப்படுகின்றது.
6 மாதங்களுக்கு முன்னரே பயணப் பையொன்றுக்குள் போடப்பட்டு, துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. எனினும், பைக்குள் துப்பாக்கி இருப்பது தமக்கு தெரியாது என அப்பெண் கூறியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
துப்பாக்கி ஏன் ஒளித்துவைக்கப்பட்டது, அது குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டனவா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.