“இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது. எனினும், அவ்வாறு நடக்கவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுவதானது அவர்களின் இனவாத முகத்தையே வெளிப்படுத்துகின்றது.” – என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் தமிழ் நாளிதழொன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே சிறிதுங்க ஜயசூரிய இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
‘இனவாத ராஜபக்ச அரசாங்கத்துக்கும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. தேசிய மக்கள் சக்தியினர் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். மஹிந்த ராஜபக்ச முன்னெடுத்த இனவாத வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவித்தமை இதற்கு சிறந்த சான்றாகும். மஹிந்த மற்றும் ரணில் அரசுகளும் இதையே செய்தன. தமிழ் மக்களை ஏமாற்றும் கீழ்த்தரமான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது.” – எனவும் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 2009 இல் இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை நடுநிலையானவர்கள் ஏற்கின்றனர். சில தாராளவாதிகள்கூட அதை ஏற்கின்றனர். தேசிய அதை ஏற்க மறுப்பது அவர்களின் இனவாத முகத்தையே வெளிப்படுத்துகின்றது.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு, கிழக்கில் சிறந்த பாடம் புகட்டப்பட்டது.” – என சிறிதுங்க ஜயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.