காசாவின் மேற்கு கரையில் புதன்கிழமை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் இஸ்ரேல் தூதரை அழைத்து கனடா விளக்கம் கோரியுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக கருத்துரைத்த பிரதமர் மார்க் கார்னி இந்த நிலைமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.
நான்கு கனேடியர்கள் உள்ளிட்ட குழுவினர் Jenin நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே இத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. எனினும் கனேடியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என வெளி விவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். Jenin நகருக்கு இராஜதந்திரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் அறிக்கையில், இராஜதந்திரிகள் குழு அதன் அங்கீகரிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றது என்றும், குழுவினர் செல்ல அனுமதிக்கப்படாத பாதையில் விலகிச் சென்ற போதே இராணுவம் எச்சரிப்பதற்காக துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாகவும் கூறியது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று இராணுவம் கூறுகிறது.
இதே போன்று பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளும் தமது நாடுகளுக்கான இஸ்ரேல் தூதுவர்களை அழைத்து விளக்கம் கோரியுள்ளன. இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், பிரதமர் மார்க் கார்னி, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் ஆகியோர் காசாவில் இஸ்ரேலின் இன் புதிய இராணுவ நடவடிக்கைகளுக்கும், போதியளவு உணவு உதவி இல்லாததற்கும் பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் மீது பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியிருந்தனர்.
கனடாவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் கனடாவின் கடிதத்தை வரவேற்று சரியான திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படி என்று அழைத்துள்ளது.