இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இந்தியா செல்லக்கூடாது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரருமான மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னிடம் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று சொன்னால், நான் நிச்சயமாக ‘முடியாது’ என்று சொல்லி இருப்பேன். அது மிகவும் எளிதான முடிவாக இருந்திருக்கும். வாழ்க்கையும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை. நமது சம்பளம் அல்ல. இது தனிப்பட்ட முடிவு. யாரையும் கட்டாயப்படுத்தியோ, அழுத்தத்தை உணர வைத்தோ மீண்டும் போய் விளையாட வேண்டும் எனச் சொல்ல முடியாது.
பணமா? பாதுகாப்பா? என்ற கேள்வி வந்தால் பாதுகாப்பு தான் முக்கியம் என்பேன். இது எனது தனிப்பட்ட முடிவு. எந்தவொரு வீரரும் ஐபிஎல் அல்லது பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடியாக வேண்டுமென்ற அழுத்தத்தை எதிர்கொள்ள கூடாது.
மேலும், ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி ஜுன் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஒரு வார காலத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் தயாராக வேண்டி உள்ளது. அதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.என ஜான்சன் கூறியுள்ளார்.