கனடாவின் புதிய லிபரல் அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக ஈழத்தமிழர் ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவை இன்று (13) பதவியேற்றுக் கொண்டது. இந்த பதவியேற்பு ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது. இதில் பிரதமராக மார்க் கார்னி உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இதில் முக்கியமான அமைச்சகமாக கருதப்படும் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சுப் பதவி ஹரி ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டது.
கடந்த மாதம் ஹரி ஆனந்தசங்கரிக்கு நீதியமைச்சு வழங்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை பொதுப் பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல், உளவு, பொலிஸ், எல்லை பாதுகாப்பு, அவசரநிலை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை இந்த அமைச்சகம் ஒருங்கிணைக்கிறது.
தேசிய மற்றும் உள்ளூர் பாதுகாப்பு கொள்கைகள் தேசிய பொலிஸ் சேவையை மேற்பார்வை செய்தல், சட்ட அமலாக்கம், குற்றவியல் விசாரணைகள், உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு சேவைகளுடன் இணைந்து செயல்படுதல், அவசரநிலை மேலாண்மை ஆகியவற்றை இந்த அமைச்சகம் நிர்வகிக்கும்.
இதனைத்தவிர, எல்லை பாதுகாப்பு, அகதிகள், குடிவரவாளர் பாதுகாப்பு, சட்டப்பூர்வமான குடியேற்றம், தீயணைப்பு சேவைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு சேவைகள், தேசிய பாதுகாப்புத் தயார்நிலை, பிரத்தியேக சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் ஆகியவையும் இந்த அமைச்சகத்தின் கீழ் வரும் விடயதானங்களாகும்.
பிரத்தியேக சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் உள்ளிட்ட விடயதானங்கள் இந்த அமைச்சகத்தின் கீழ் வரும் ஏனைய முக்கிய விடயதானங்களாகும்.
பொதுப் பாதுகாப்புத் துறை மேலும் வலுப்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரியிடம் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஹரி ஆனந்தசங்கரி தனது இளம் வயதில் கனடாவிற்குச் சென்று, கல்வி கற்று பின்னர் பல்கலைக்கழகப் பட்டங்களையும் சட்டத்துறை பட்டத்தையும் பெற்றார். அதன்பின்னர் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
கனடாவின் தமிழர் சமூகம் சார்ந்த பல அமைப்புக்களிலும் முக்கிய பதவிகளை வகித்து ஹரி ஆனந்தசங்கரி சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.