கனடா போஸ்டுக்கும் அதன் 55,000 தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பேச்சுவார்தையில் எந்தவித ஒப்பந்தமும் எட்டப்படாத நிலையில் வேலை நிறுத்த காலக்கெடு நெருங்கி வருவதை கருத்திற்கொண்டு கடந்த வாரம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனடா போஸ்டுக்கும் தொழிற்சங்கமான CUPW இற்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் எதிர்வரும் May 22 ஆந் திகதி முடிவடையவுள்ள நிலையில் குறித்த திகதிக்குள் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாவிட்டால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் கனடா போஸ்டுக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்திருந்தது பின்னர் Canada Industrial Relations Board இன் உத்தரவை தொடர்ந்து இரு தரப்பினரும் கடமைக்கு திரும்பினர். இந்நிலையில் மற்றொரு வேலை நிறுத்தம் குறித்து கனடாவின் வணிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மே 22 வேலைநிறுத்த காலக்கெடுவிற்கு முன்னதாக மத்தியரசின் ஆணைக்குழு மே 15 அன்று Canada Post இன் நிதிப்பிரச்சினை குறித்த அறிக்கையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் ஒட்டாவா, கனடா போஸ்டுக்கு குறுகிய கால நிதியாக $1 பில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்கியது. கனடா போஸ்ட் 2018 முதல் $3.3 பில்லியனை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக நட்டத்தை எதிர்நோக்கி வரும் கனடா போஸ்ட் குறித்து தற்போதைய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பது தொடர்பில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.