கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே தோல்வியை ஒப்புக்கொண்டதால் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் தறுவாயில் இருப்பதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இறுதி வாக்கெடுப்பு பிரித்தானியாவின், கொலம்பியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகியதையடுத்து, புதிய பிரதமராக மார்க் கார்னே தெரிவு செய்யப்பட்டு ஆறு வாரங்களுக்குள் அங்கு தேர்தல் நடைபெற்றது.
கனடாவின் 45ஆவது நாடாளுமன்றத்துக்கு இந்தத் தேர்தல் ஊடாக 343 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதில் 172 இடங்களில் வெற்றியடைகின்றவர்களின் ஆதரவுடன் பிரதமர் ஆட்சியமைப்பார்.
இம்முறை ஆளும் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாகக் கனடா பரிணமிக்கும் என்ற வகையில், டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டு வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு எதிராகக் கனடாவின் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த நிலைப்பாடு, முக்கிய இடத்தை வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.