போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனையும், விசாரணையும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். நடிகர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
ஹோட்டலில் நடந்த போதைப்பொருள் தடுப்புச் சோதனையின் போது, அங்கிருந்து தப்பிச் சென்றது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் சாக்கோவுக்கு கொச்சி போலீஸார் நேற்று நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்றைக்கு இந்த கைது சம்பவம் நடந்துள்ளது.
நோட்டீஸ் வழங்க நடிகரின் திருச்சூர் வீட்டுக்குப் போலீஸார் சென்ற போது, அவர் வீட்டில் இல்லாததால் அவரின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் சாக்கோ, எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹோட்டலில் நடந்த சோதனையின் போது, நடிகர் தப்பிச் சென்றது ஏன் என்பது குறித்து கேட்டறிவதே விசாரணையின் நோக்கம் என்று போலீஸார் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.
போதைப்பொருள் தடுப்புச் சோதனை: முன்னதாக, மாவட்ட போதைப் பொருள் தடுப்பு அதிரடிபடை குழுவினர் புதன்கிழமை இரவு 10.45-க்கு போதைப் பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவரைத் தேடி ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றனர். குற்றம்சாட்டப்பட்டவரை போலீஸாரால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றாலும், ஹோட்டலின் பதிவேட்டில் நடிகர் சாக்கோவின் பெயர் இருப்பதை போலீஸார் பார்த்து, அங்கு அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கிருந்து நடிகர் தப்பிச் சென்றது தெரியவந்ததது.
போதைத் தடுப்புப்பிரிவு போலீஸார் ஹோட்டலுக்குள் நுழைந்ததும், நடிகர் அங்கிருந்து தப்பிச்செல்வது சிசிடிவி காட்சியிலும் பதிவாகி உள்ளது. தப்பி ஓடுவது சாக்கோ தான் என்பதை போலீஸார் உறுதியும் செய்துள்ளனர்.
நடிகை புகார்: இதனிடையே, மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், ஷைன் டாம் சாக்கோ மீது ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். அவர்கள் இருவரும் இணைந்து ‘சூத்ரவாக்யம்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அதன் படப்பிடிப்பில் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருட்களை உட்கொண்டு தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் நடிகை புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ‘அம்மா’ ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. வின்சியின் புகார் குறித்து விளக்கம் அளிக்க ஷான் டைம் சாக்கோவுக்கு அந்த குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.