சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை என்று அவரது தந்தையும், நடிகருமான சிவகுமார் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சூர்யாவின் தந்தை சிவகுமாரும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இந்த விழாவில் பலரும் சூர்யாவின் உழைப்பு, அகரம் பவுண்டேஷன் உள்ளிட்ட பல விஷயங்களை பாராட்டி பேசினார்கள்.
‘ரெட்ரோ’ விழாவில் சிவகுமார் பேசும் போது, “சூர்யாவுக்கு 17 வயசின்போது செயின்ட் பீட்ஸ் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கள் வீட்டுக்கு உறவினரான ஒரு ஜோதிடர் வந்தார். எனது இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் கேட்டார். இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் பார்த்த பிறகு, உங்களுடைய மகன் கலைத் துறையில் மிக உச்சத்துக்கு வருவார் என சொன்னார். சூர்யாவா, கார்த்தியா என கேட்டேன். அவர் பெரியவன் சூர்யாதான் என்று சொன்னார்.
“காலையிலிருந்து மாலை வரை மொத்தமாகவே நான்கு வார்த்தை தான் பேசுவான் சூர்யா. அவன் கலைத் துறையில் வெற்றி பெறுவான் என்கிறீர்களே…” என்றேன். அதன் பிறகு இயக்குநராக வருவாரா, ஒளிப்பதிவாளராக வருவாரா எனக் கேட்டபோது, ‘இல்லை… முகத்தை தொழிலாக கொண்டிருப்பார்’ என்றார். அப்போது நான் ‘நடிகராக வருவாரா?’ எனக் கேட்டபோது, அவர் ‘ஆம்’ என்றார். ‘அதுமட்டுமல்ல, உங்களை விட சிறந்த நடிகர் என்ற பெயரையும் சம்பாதிப்பார். உங்களைவிட நிறைய விருதுகளையும் வாங்குவார். உங்களைவிட நிறைய சம்பாதிப்பார்’ என்றார். சூர்யாவே இதை கேட்டுவிட்டு சின்ன புன்னகையுடன் கடந்து சென்று விட்டார்.
அதன் பிறகு லயோலா கல்லூரியில் இணைந்தார். அதன் பிறகு தனியார் கம்பெனியில் வேலை செய்தார். அந்தத் தருணத்தில் நாங்கள் ஒரு கலை விழா நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு சென்றோம். அப்போது இயக்குநர் வசந்த்தும் உடன் வந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் வைத்து ஒரு முறை இயக்குநர் வசந்த், சூர்யாவை பார்த்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து இயக்குநர் வசந்த் எனக்கு போன் செய்து ‘உங்க பையன் சூர்யாவுக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா?’ என கேட்டார். ‘இல்லை’ என்று நான் சொல்லிவிட்டேன். ‘நான் அவரிடம் பேசலாமா?’ என கேட்டார்.
அதன் பிறகு இயக்குநர் வசந்த், சூர்யாவை நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. ‘நேருக்கு நேர்’ படம் வெளியானது. அதில் இடம்பெறும் ஒரு பாடலில் சூர்யாவின் க்ளோசப் காட்சி இருந்தது. அந்தக் காட்சிகள் தெரிந்த சூர்யாவின் கண்களை பார்த்த இயக்குநர் ஒருவர், ‘இது தமிழ்நாட்டின் வாழும் பெண்களின் தூக்கத்தை கெடுக்கும்’ எனக் குறிப்பிட்டார்.
சினிமாவைப் பற்றி கனவில் கூட நினைக்காத சூர்யாவை இன்று நடிகராக உயர்த்திய இயக்குநர் மணிரத்னத்தையும், இயக்குநர் வசந்த்தையும் பாதம் தொட்டு வணங்குகிறேன். அதன் பிறகு இயக்குநர் பாலா, ‘நந்தா’ என்றொரு படத்தை கொடுத்து சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது. இவரை உருவாக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார் சிவகுமார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. மே 1-ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தினை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து இதனை தயாரித்துள்ளது.