கனடாவில் மீண்டும் குடிவரவுகளை இலகுபடுத்த வேண்டுமென அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கனேடிய கூட்டாட்சி தேர்தல் பிரசாரங்களில் எந்தவொரு கட்சியும் இது குறித்து கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் இது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவின் வரி விதிப்புக்கள் குறித்த கலந்துரையாடல்கள் வலுப்பெற்றுள்ளன.
எவரும் தற்போது குடிவரவு விடயங்கள் பற்றி பேச விரும்பில்லை என்பது வௌிப்படையாகிறது என AMSSA அமைப்பின் தலைவி கேடி கிரேட்டர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தேர்தல் காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக நல அமைப்புக்கள் ஒன்று திரண்டு அனைத்து கட்சிகளுக்கும் இது குறித்த கடிதங்களை அனுப்பியுள்ளன. குறித்த கடிதத்திலுள்ள முக்கிய கோரிக்கைகள் ஐந்தையும் தேர்தல் கட்சிகள் ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு தொடர்பிலான ஒருங்கிணைந்த தரவுகள் வௌிவர வேண்டும், ஒருங்கிணைந்த அணுமுறை அவசியம், குடிவரவிற்கு எதிரான கருத்துக்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு இருக்க வேண்டும், மனிதாபிமான நோக்கில் நிகழும் விடயங்களை உறுதிப்படுத்த வேண்டும், குடிவரவின் பின்னணியில் கிடைக்கின்ற வெற்றியை அளவீடு செய்வதற்கான கண்காணிப்புக்கள் அவசியம் என்ற ஐந்து முக்கிய கோரிக்கைகள் முன்னைக்கப்பட்டுள்ளது.