கனடா முழுவதும் விற்கப்படும் பல அங்கீகரிக்கப்படாத பாலியல் மேம்பாட்டு பொருட்கள் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என கனடா சுகாதாரத்துறை (Health Canada) எச்சரித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்டா, ஒன்டாரியோ, குய்பெக், மனிட்டோபா, நியூ பிரன்சுவிக் ஆகிய மாகாணங்களில் உள்ள கடைகளில் இப்பொருட்கள் விற்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை
இந்த விடயம் தொடர்பில் கனடிய சுகாதார நிறுவனம் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி, பல கடைகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
“அங்கீகரிக்கப்படாத மருத்துவ பொருட்களுக்கு கனடா சுகாதாரத்துறையின் அனுமதி இல்லை, அதனால் அவை பாதுகாப்பு, பயன்திறன், தரம் ஆகியவற்களைப் பரிசீலிக்கப்படவில்லை,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொருட்களில் அளவுக்கு மீறிய அல்லது விரும்பத்தகாத மருந்து சேர்மங்கள் இருக்கலாம். சில பொருட்கள், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியவை அல்லது சரியான மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் உட்கொள்வதால் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பொருட்கள் பாக்டீரியா தொற்று, ஆண் அல்லது பெண் ஹார்மோன் அதிகரிப்பு, செரிமான பிரச்சனை போன்றவற்றிற்குப் பயன்படும் என்றாலும், வழக்கமான மருந்துகளுக்கான பாதுகாப்பு சோதனை செய்யப்படாததால் சுகாதார ஆபத்து அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை பயன்படுத்தியோர் உடனே சுகாதார நிபுணர்களை அணுக வேண்டும் என கனடா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
“அங்கீகரிக்கப்படாத மருத்துவப் பொருட்களை விற்பது கனடாவில் சட்டவிரோதம்,” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா எல்லையில் இருந்து இந்த பொருட்கள் நாட்டிற்குள் வருவதைத் தடுக்க, கனடா எல்லை பாதுகாப்பு நிறுவனம் (CBSA) உடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நுகர்வோர் ஏதேனும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாக கனடா சுகாதாரத்துறைக்கு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.