அமெரிக்கா நேற்று (03) கனடா, மெக்சிக்கோ, சீனா ஆகிய நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரிவிதிப்பை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று டொனால்ட் டிரம்ப் தனது அறிவிப்பில் பல்வேறு சீன பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.
பென்டன்டைல் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக சீனா வளர்ந்துள்ளது.
இந்த மூலப்பொருட்கள் மெக்சிக்கோவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பென்டனைல் போதைப்பொருளாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது.இதைக் காரணம் காட்டியே சீனப் பொருட்களுக்கு ட்ரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (04) அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு சீனா புதிதாக 10சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வரி விதிப்பை அறிவித்துள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு வரும் மார்ச் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சீன நிதி அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்பு செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேச வர்த்தக கழகத்தில் சீனா புகார் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.