கனடாவின் டொராண்டோவில் கார் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பதின் பருவ சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திடுக்கிடும் கார் பறிப்பு
டொராண்டோவின் ஸ்கார்பரோ(Scarborough) பகுதியில் உள்ள டோர்செட் பார்க்கில்(Dorset Park) திங்கள்கிழமை மதியம் துணிகர கார் பறிப்பு சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 டீன் ஏஜ் குற்றவாளிகளை டொராண்டோ காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கென்னடி(Kennedy) மற்றும் எல்லெஸ்மியர் சாலை(Ellesmere roads) சந்திப்புக்கு அருகே நடந்த இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடந்தது என்ன?
பிற்பகல் 12:15 மணியளவில், கார் திருட்டு குறித்து பொலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் விரைந்து வந்த பொலிஸார் விசாரணையில் இறங்கினர்.
மூன்று இளைஞர்கள் திருடப்பட்ட ஹோண்டா சிவிக்கில் வந்து, ஒரு வாகன நிறுத்தும் இடத்தில் நுழைந்துள்ளனர்.
முகமூடி அணிந்திருந்த இரண்டு இளைஞர்கள், அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை அணுகி, கத்தியை காட்டி மிரட்டி அவரது காரை பறித்து சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் காயமின்றி தப்பிய நிலையில், டொராண்டோ பொலிஸ் சேவையின் பொலிஸ் சேவைகள் பாதிக்கப்பட்டவரின் திருடப்பட்ட காரை விரைவாக கண்டுபிடித்தனர்.
அத்துடன் திருடப்பட்ட ஹோண்டா சிவிக் காருடன் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
குற்றவாளிகள் யார்?
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் டொராண்டோவை சேர்ந்த 17, 15 மற்றும் 14 வயதுடைய டீன் ஏஜ் சிறுவர்கள் ஆவார்கள்.
இவர்கள் மீது ஆயுதங்களுடன் கொள்ளை, மாறுவேடமிட்டு குற்றம் புரிதல், 5000 டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள திருட்டு சொத்தை வைத்திருத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 15 வயது சிறுவன் ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் படி, குற்றவாளிகள் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.