தங்களது கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை – மல்வத்தை கணபதிபுரம் பகுதி மக்கள் இராணுவத்திடம் கோரியுள்ளனர்.
இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று (19) அங்குள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சட்டவிரோத மதுபான விற்பனையால் தங்களது தரப்பு வெகுவாக பாதிப்படைந்துள்ளதாகவும் வீடுகளில் மோதல்கள் இடம்பெறுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்ட போதிலும் அதனால் எந்த பயனும் கிடைக்கவில்லை என அந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அவ்வாறான சட்டவிரோத மதுபானத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் தலையீடு செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள அங்குள்ள இராணுவத்தினர், இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.