20.3 C
Scarborough

கனேடிய எண்ணெய், எரிவாயு அமெரிக்காவிற்கு தேவையில்லை: ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

Must read

கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், நாங்கள் மற்ற நாடுகளிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்கிறோம். ஆனால் கனடா பல ஆண்டுகளாக சமாளிக்கவே மிகவும் கடினமாக உள்ளது என்றார்.

மேலும், எங்கள் கார்களைத் தயாரிக்க கனேடியர்களின் உதவி எங்களுக்குத் தேவையில்லை, அவர்களே அவற்றை அதிகமாக உருவாக்குகிறார்கள். எங்களுக்குச் சொந்தமாக காடுகள் இருப்பதால் அவர்களின் மரக்கட்டைகள் எங்களுக்குத் தேவையில்லை என்றார்.

கனேடியர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவும் எங்களுக்குத் தேவையில்லை, தேவைக்கும் அதிகமாக எங்களிடம் உள்ளது என்றார். கனேடிய ஏற்றுமதிகளை அமெரிக்கா நிறுத்தினால், அது இரு நாடுகளுக்கும் இடையே நிறுவப்பட்ட வர்த்தக உறவை சீர்குலைக்கும் என்றே கூறப்படுகிறது.

அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும்பகுதியை கனடா வழங்குகிறது – இது உலகின் பிற பகுதிகளின் மொத்த இறக்குமதியை விட அதிகம். 2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் 60 சதவீதம் எல்லையின் வடக்கிலிருந்து வந்ததாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, அந்த ஆண்டு அமெரிக்காவின் இறக்குமதி விநியோகத்தில் 99 சதவீதத்தை கனடா வழங்கியது. 2022 ஆம் ஆண்டில் கனடாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் 92 சதவீதம் அமெரிக்காவிற்குச் சென்றது.

பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும்

மேலும், அந்த கார்களை உருவாக்கும் உதிரி பாகங்கள் இறுதியாக ஒருங்கிணைக்கப்படும் முன்பு கனடா-அமெரிக்கா-மெக்சிகோ எல்லையை எட்டு முறை கடக்கக்கூடும்.

2022 ல், கனடாவின் மொத்த வனவியல் ஏற்றுமதி 45.6 பில்லியன் டொலராக இருந்தது, அதில் பெரும்பாலானவை அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதாக கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மட்டுமின்றி, கனேடிய வர்த்தக சபையின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 3.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் எல்லையைக் கடக்கின்றன. மேலும், அமெரிக்கா-கனடா வர்த்தக உறவு என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான 3.7 மில்லியன் வேலை வாய்ப்புகளுடன் நேரடியாக தொடர்புடையது என்றே கூறுகின்றனர்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ட்ரம்பின் பிடிவாதத்தால் ஒரு வர்த்தகப் போர் மூளும் என்றால், கனடா முழுவதும் லட்சக்கணக்கான பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும் என்றே வணிக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article