எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
லிபரல் கட்சி புதிய தலைவரைத் தெரிவு செய்த உடன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் ட்ரூடோ கூறியதை அடுத்து தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறிய ட்ரூடோ, தனது சொந்த முடிவுகளின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், கனேடியர்கள் தன்னைத் தெரிவு செய்த வேலையைச் செய்வதில் தாம் முழுமையாக கவனம் செலுத்துவதாகவும், இந்த நேரத்தில் இது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, டொனால்டு ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு கனடா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது குறித்து விவாதிக்க அவர் கனடாவின் முதல்வர்கள், அமெரிக்காவிற்கான தூதர் மற்றும் சில பெடரல் அமைச்சரவை சகாக்களையும் சந்தித்துள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பணியாற்றிய நிலையில், எதிர்க்கட்சிகளிடமிருந்தும் சொந்த கட்சிக்குள்ளும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை ட்ரூடோ எதிர்கொண்டார்.
அவரது நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்த பிறகு இந்த அழுத்தம் தீவிரமடைந்தது. ட்ரூடோவுக்கு பதிலாக புதிய ஒரு தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் உத்தியோகப்பூர்வமாக இதுவரை துவங்கவில்லை என்ரே கூறப்படுகிறது.