இந்தோனேஷியாவில் மவுண்ட் இபு எரிமலை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, கிராம மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
ஹல்மஹெரா புறநகர் பகுதியில் மவுண்ட் இபு எரிமலை உள்ளது. இந்த எரிமலையானது இம்மாத தொடக்கத்திலேயே நான்கு முறை வெடித்து சிதறியுள்ளன.இந்நிலையில், ஐந்தாவது முறையாக நேற்று (15) மீண்டும் வெடித்துச்சிதறி கரும் புகையை வெளியேற்றியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது இதனையடுத்து, அந்த எரிமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரம் பேரை வேறு இடத்திற்கு மாற்ற அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் இக்கிராம மக்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் எரிமலையைச் சுற்றி 5 கி.மீ., தூரத்திற்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எரிமலை அவ்வப்போது வெடித்துச் சிதறுவதும் குறிப்பிடத்தக்கது.