2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில், சீன மக்கள் பாம்பு ஆண்டைக் கொண்டாட முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
உலகம் முழுவதும் ஜனவரி முதலாம் திகதி ஆங்கில புத்தாண்டு பிறந்துவிட்டாலும் சந்திர நாட்காட்டியை கடைப்பிடிக்கும் சீனாவை பொறுத்தவரை புத்தாண்டு ஜனவரி 29ஆம் திகதிதான் பிறக்கிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஓர் உயிரினத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்படும் நிலையில் தற்போதைய டிராகன் ஆண்டு விடைபெற்று பாம்பு ஆண்டு பிறக்கவுள்ளது. இதையடுத்து சீனா முழுவதும் எதிர்வரும் பாம்பு ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
சீனாவின் நகரங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டுள்ளன. வீதிகள், வீடுகள், வணிக வளாகங்கள், பாம்பு வடிவிலான மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளன. பாம்பு ஆண்டை வரவேற்கும் விதமாக கடை வீதிகளில் பாம்பு பொம்மைகளின் விற்பனை களைகட்டி வருகிறது. செல்லப் பிராணிகள் விற்பனை மையங்களில் வீட்டில் வைத்து வளர்ப்பதற்காக ஏராளமான நஞ்சில்லா பாம்புகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பாம்புகளை ஆன்மீகம், வளர்ச்சி மற்றும் நீண்ட ஆயுளின் அடையாளமாகக் கருதும் சீனர்கள் ஜனவரி 29ஆம் திகதி பிறக்கும் பாம்பு ஆண்டு தங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.