50 ஹீரோயின்கள் படத்தின் கதை பிடித்திருந்தும் தன்னுடன் நடிக்க முடியாது என்று சொல்லி புறக்கணித்துவிட்டதாக நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.
இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பாலா பேசியதாவது: “இப்படத்துக்கான ஹீரோயின் தேர்வு எப்படி நடந்ததென்றால், அலுவலகத்தில் கதை கேட்பார்கள். நான் ஹாலில் காத்திருப்பேன். கதை நன்றாக இருக்கிறது. யார் ஹீரோ? என்று கேட்பார்கள். பாலா என்று சொன்னதும் நான் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள். அது அவர்கள் மீதான தவறு கிடையாது. இப்படியே ஒவ்வொரு புறக்கணிப்பாக நடந்து கொண்டிருந்தது. இப்படியே 50 பேர் என்னை புறக்கணித்தனர். நானும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. 51வது ஆளாக வந்தவர்தான் நமிதா கிருஷ்ணமூர்த்தி. கதையை கேட்டபிறகு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்டிப்பாக நான் பண்ணுகிறேன் என்று சொன்னார்” இவ்வாறு பாலா பேசினார்.
பாலா நாயகனாக அறிமுகமாகும் படம் ‘காந்தி கண்ணாடி’. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடித்து செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரித்துள்ளார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் – மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதைத் தாண்டி இவருடைய உதவும் குணத்துக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.