மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமான அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ‘பொக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த 94,000 ரசிகர்கள் முன்னிலையில் முதல் நாளன்று 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.
மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் 124 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆரம்ப நாளன்று ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் 20 விக்கெட்கள் சரிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இந்த விளையாட்டரங்கில் 1902இல் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆரம்ப நாளன்று 25 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டிருந்தன.
மேலும் நான்காவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 94,119 ரசிகர்கள் ஆரம்ப நாளன்று கண்டுகளித்தனர். 2015 உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் கண்டு களித்தவர்களை விட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
வேகப்பந்து வீச்சாளர்கள் மாத்திரம் பயன்படுத்தப்பட்ட இப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக ஜொஷ் டங் 5 விக்கெட் குவியலையும் அவுஸ்திரேலியா சார்பாக மைக்கல் நேசர் 4 விக்கெட் குவியலையும் பதிவு செய்தனர்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளாலும் 160 ஓட்டங்களை எட்டமுடியாமல் போனது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களும் மீதம் இருக்க அவுஸ்திரேலியா 46 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது.
துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் மைக்கல் நேசர் அதிகப்பட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரும் கெமரன் க்றீனும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 52 ஓட்டங்களே இன்றைய ஆட்டத்தில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
அவுஸ்திரேலியாவின் முதல் 6 விக்கெட்கள் 91 ஓட்டங்களுக்கும் கடைசி 4 விக்கெட்கள் 9 ஓட்டங்களுக்கும் சரிந்தன.
மைக்கல் நேசரைவிட உஸ்மான் கவாஜா 29 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரி 20 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.
இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட நால்வரும் குறைந்தது ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஜொஷ் டங் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பதிவுசெய்த அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.
அவரை விட கஸ் அட்கின்சன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்றைடன் கார்ஸ் 42 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 29.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மிச்செல் ஸ்டார்க், மைக்கல் நேசர் ஆகியோரின் பந்துவீச்சுக்களில் திணறிப்போன இங்கிலாந்து அதன் முதல் 4 விக்கெட்களை முதல் 8 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்குள் இழந்தது.

