மேஷம் – 63 %
அறிவுப்பூர்வ முடிவுகளே வெற்றி தரும்!
மேஷம் ராசியினருக்கு பல இடங்களிலிருந்தும் பணம் வரும். புதிய சொத்து சேர்க்கை உண்டு. லாப ஸ்தானத்தில் ராகு மற்றும் ராசியதிபதி செவ்வாய் ஆகியோர் குரு பார்வை பெற்றிருப்பதாலும், தன ஸ்தானத்தில் உச்ச சந்திரன் இருப்பதாலும் மலைபோல் வந்த தடைகள் பனி போல் விலகும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்கள் மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பார்கள். எதிர்பாராத விதமாக புதிய பொறுப்புகளும் அவர்களை வந்து சேரும்.
பல நாட்களாக எதிர்பார்த்த, எதிர்பாராத நல்ல மாற்றங்களையும் உங்களுக்கு இந்த புத்தாண்டு தரும். தொலைநோக்குப் பார்வையோடு, சிந்தித்து பல முடிவுகளை எடுக்க வேண்டிய ஆண்டு இது. உணர்வுப்பூர்வ முடிவுகளை விட, அறிவுப்பூர்வ முடிவுகளே உங்களுக்கு வெற்றி தரும். வருட ஆரம்பத்தில் சிக்கல்கள் இருந்தாலும் போகப்போக நிலைமை சீராகி விடும்.
குடும்பம், நிதிநிலை
குடும்ப உறுப்பினர்களுடன் அமைதியான போக்கை கையாளவும். நெருங்கிய உறவுகளுக்குள் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். பல விஷயங்களை பொறுமையாக கையாண்டுதான் சரி செய்ய வேண்டும். உறவுகளுக்குள் எப்படிப்பட்ட சிக்கல்கள் இருந்தாலும் அவை ஆண்டின் பிற்பகுதியில் விலகி விடும். எதிலும் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நிதி நிலையை பொறுத்தவரை பண வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் திறனும் உங்களுக்கு ஏற்படும். அதனால், எந்த ஒரு செலவையும் திட்டமிட்டு செய்யுங்கள். பழைய கடன்களை திருப்பி செலுத்தி விடுங்கள்.
தொழில், உத்தியோகம்
முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வை பலன் காரணமாக உங்களுடைய தொழில் நடைமுறைகளில் பல மாற்றங்களை செய்வீர்கள். சுயதொழில் செய்ய திட்டமிடுபவர்கள் மனத்தளர்ச்சி அடையாமல் செயல்பட வேண்டும். ஜூன் மாதம் வரை சில சிக்கல்கள் ஏற்பட்டு அதன் பிறகு விலகும். ஏற்கனவே, தொழில் செய்பவர்கள் ஆண்டின் பிற்பகுதியில் புதிய நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது வேலை மாற்றம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும். பணியிடத்தில் பொறுமையாக செயல்பட்டால் ஆண்டின் பிற்பகுதியில் அதன் நன்மைகளை பெறுவீர்கள். பலருக்கும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கலை, கல்வி
ராசியில் சனியின் சஞ்சாரம் இருப்பதால் கலைத்துறையினர் மனம் சளைக்காமல் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்பாராத நேரத்தில் திடீர் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய படைப்புகளின் தனித்தன்மைக்காக பல பாராட்டுக்கள் உங்களுக்கு வந்து சேரும்.
எழுத்து மற்றும் இசைக்கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். ஒரு சிலருக்கு வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகள் சென்று தங்களுடைய திறமையை காண்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கல்வியைப் பொறுத்தவரை உயர்கல்வி பெறுபவர்களுக்கு இந்த ஆண்டு பல விதங்களிலும் நன்மை தரும். அரசு போட்டித் தேர்வுகளில் பல தடவை முயன்றும் வெற்றி பெற முடியாதவர்கள் இந்த வருடம் வெற்றி பெறுவார்கள். புதிய தொழில்நுட்பம் அல்லது சான்றிதழ் படிப்புகளில் இணைவதற்கு இது தகுந்த காலகட்டம்.
நன்மைகள் நாடி வர..
மேஷம் ராசியினருக்கு ஒற்றைத் தலைவலி, தைராய்டு குறைபாடு, பற்களில் பாதிப்பு மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் கிருமி பாதிப்பு ஏற்பட்டு விலகும். வாகனங்களை ஓட்டும் பொழுது கூடுதல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன் சுமுகமாக பழகுவதன் மூலம் மன அமைதியும் தெளிவும் ஏற்படும். ஏழை எளியோர், வயதானவர்கள், உடல் ஊனமுற்றோருக்கு உங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் ஆடை தானம் செய்வதன் மூலம் புதிய நபர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பிறந்த கிழமை அல்லது தேதியில் சிவப்பு நிற உடை அணிந்து மஞ்சள் நிற பொருட்களையோ அல்லது மஞ்சள் நிற உடை அணிந்து சிவப்பு நிற பொருட்களையோ கோவிலில் வைத்து தானம் தருவது நன்மை பல தரும்.
ரிஷபம்
லாப ஸ்தானத்தில் சனி!
ரிஷப ராசியினருக்கு நீண்ட நாட்களாக மனதில் நினைத்த விருப்பங்கள் நிறைவேறும். வருடத்தின் பிற்பகுதியில் திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும். லாப ஸ்தானத்தில் சனி, தன ஸ்தானத்தில் குரு உள்ள நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. அதனால், நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான குடும்ப மற்றும் பொருளாதார முடிவுகளை இந்த ஆண்டு மேற்கொள்வீர்கள்.
உங்கள் தனிப்பட்ட உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சீராக பராமரித்து வர வேண்டும். பல விஷயங்களில் உங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்வது அவசியம். தொழில் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். இடமறிந்து பேசுவது அவசியம்.
குடும்பம், நிதிநிலை
கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். வாழ்க்கைத் துணையின் உடல் மற்றும் மன நலம் குறித்து அக்கறை கொள்ளுங்கள். குடும்பத்தின் மீது அக்கறை உள்ள அளவிற்கு உங்கள் மனதில் அமைதி ஏற்படும். எதையும் வெளிப்படையாக பேசி நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். புதுமண தம்பதியருக்கு சுபச் செய்திகள் வந்து சேரும்.
நிதி நிலையை பொறுத்தவரை ஆண்டின் முற்பகுதியில் பல்வேறு செலவுகள் ஏற்படலாம். பிற்பகுதியில் அதற்கு ஏற்ற வருமானம் வந்து சேரும். நீண்ட கால முதலீடுகளை செய்வதற்கு இது நல்ல நேரம். வீடு மனை நிலம் வாங்குபவர்கள் ஆவணங்களின் உண்மை தன்மையில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற கடன்களை கண்டிப்பாக வாங்கக் கூடாது. பின்னால் அது சிக்கலாக மாறிவிடலாம்.
தொழில், உத்தியோகம்
தொழில் துறையினருக்கு இது நல்ல ஆண்டு. வியாபாரிகளுக்கு இது பொற்காலம் என்று சொல்லலாம். புதிய பங்குதாரர்கள், தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வார்கள். வெளி மாநில, வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வர்த்தகம் பெருகும். தொழில் அல்லது வியாபாரத்தில் பிறரது தேவையற்ற ஆலோசனைகளை தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டும். உழைப்புக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும் ஆண்டு இது. அதே சமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உத்தியோக ரீதியாக வெளிநாட்டு பயணங்கள் அல்லது தொடர்புகள் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு இது ஒரு சாதகமான ஆண்டு. ஃபேஷன் டெக்னாலஜி, எழுத்து மற்றும் திரை உலகத்தினருக்கு பல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். புதிய படைப்புகள் மூலம் பொதுமக்களிடையே ஆதரவு பெருகும். பெண்கள் பல சாதனைகளை செய்வார்கள். துணிச்சலாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டிய ஆண்டு இது.
கல்வியை பொறுத்தவரை மாணவர்கள் வழக்கத்தை விட கவனமாக படிக்க வேண்டும். தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்ட உழைப்பு மிக அவசியம். வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைகூடி வரும். அரசு போட்டித் தேர்வுகளில் தொடர்ந்த முயற்சிகள் அவசியம்.
காதுகளில் பிரச்சினை, ஹார்மோன் குறைபாடு ஏற்படலாம். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு, முதுகு வலி, தொழில்-வர்த்தக இலக்குகளை அடைய வேண்டும் என்ற மன அழுத்தமும் ஏற்படலாம். இனிப்பு உண்பதை குறைத்துக் கொள்ளவும். அதிகாலை நடை பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் ஆகியவை அவசியம்.
உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் முதியோர்களுக்கு இரவு உணவு வழங்குவது நல்லது. அதன் மூலம் பல தடைகள் விலகும். அருகில் உள்ள பெண் தெய்வ கோவில்களுக்கு கருவறையில் தீபம் ஏற்ற நெய் வழங்குவதும், முடிந்த போதெல்லாம் வெண்மை நிற மலர் மாலைகளை சமர்ப்பணம் செய்வதும் முயற்சிகளில் வெற்றி பெற உதவும். இஷ்ட தெய்வ மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்தால் வெற்றி நிச்சயம்.
மிதுனம்
குழந்தை பாக்கியம் தாமதமானவர்களுக்கு இந்த வருடம் நல்ல செய்தி கிடைக்கும்!
மிதுன ராசியினர் வெற்றிப் பாதையில் காலடி எடுத்து வைக்கும் மங்கள ஆண்டாக 2026 பிறக்கிறது. தசம கேந்திரமான பத்தாம் இடத்தில் உள்ள சனி, ஜென்ம ராசியிலிருந்து தனஸ்தானத்திற்கு செல்ல உள்ள குரு, வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் உள்ள கேது, தன் வீட்டை பார்க்கும் ராசி அதிபதி புதன் என்ற அமைப்பில் தொடங்கும் இந்த புத்தாண்டு பல மாற்றங்களை கொண்டு வரும்.
திருமணத்திற்கு காத்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும். தடைபட்ட திருமணங்கள் விரைவாக முடிவாகும். குடும்பத்தில் பிரிந்த உறவுகள் ஒன்றாக கூடுவார்கள். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு புகழ் அதிகரிக்கும். மூத்தவர்களுடைய வழிகாட்டுதல் கிடைக்கும். மற்றவர் ஆலோசனைகளை ஆராயாமல் பின்பற்றக் கூடாது.
குடும்பம், நிதிநிலை
குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். தாய் வழி உறவினர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். குழந்தை பாக்கியம் தாமதமானவர்களுக்கு இந்த வருடம் நல்ல செய்தி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் உள்ள சிக்கல்களை சரி செய்ய வேண்டும். குடும்பப் பெரியவர்களுடைய வழிகாட்டுதல் சரியான நேரத்திற்கு கிடைக்கும். குழந்தைகள் மூலம் பெருமை ஏற்படும்.
சொந்த பந்தங்களுக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகளை சமரசம் செய்து வைப்பீர்கள். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு பல விதங்களில் கிடைக்கும். வருடத்தின் பிற்பகுதியில் தனஸ்தான குரு உங்களுடைய பல கனவுகளை நிறைவேற்றி வைப்பார். புதிய நிலம் மற்றும் வீடு வாங்க விரும்பினால் வருடத்தின் பிற்பகுதியில் வாங்குவது நல்லது.
தொழில், உத்தியோகம்
தொழில்துறையினர் இதுவரை பாடுபட்டதற்கான பலன்களை பெறக்கூடிய ஆண்டு இது. உங்கள் வழிகாட்டுதலில் பலரும் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வார்கள். தொழில் விரிவாக்கம் செய்வதற்கும் இது நல்ல சமயம். கட்டுமானத்துறை, விவசாய விளைபொருட்கள், திரவ பொருட்கள், பெட்ரோலியம் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் அதிகப்படியான வேலைப்பளு ஏற்படும். பணி சார்ந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டி வரும். பணியிடங்களில் சக ஊழியர்களிடம் எந்தவித கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. ஒரு சிலருக்கு வேலை மாற்றம் அல்லது பணியிட மாற்றம் உண்டு.
தகவல் தொடர்பு, ஊடகம், எழுத்து, கற்பித்தல், படைப்புத்திறன் போன்ற கலைத்துறையினருக்கு இது கை கொடுக்கும் ஆண்டு. உங்களுடைய முயற்சிகள் மற்றும் படைப்புகள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறும். சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையினருக்கு மகிழ்ச்சியான ஆண்டு. டிஜிட்டல் ஊடகங்களை தொடங்க விரும்புபவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம்.
கல்வியைப் பொறுத்தவரை மாணவ, மாணவியர் தனித் திறன்கள் மேம்படும் ஆண்டு இது. நல்ல நினைவாற்றல் அவர்களுக்கு ஏற்படும். போட்டித் தேர்வுகள் மற்றும் உயர்கல்வி கற்க விரும்புவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும்.
எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் உங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டிய ஆண்டு இது. காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள், செரிமான கோளாறுகள், தோல் அரிப்பு ஏற்பட்டு விலகும். மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தாய், தந்தையின் உடன் பிறந்தோருக்கு இயன்றவரை தங்கத்தால் ஆன சிறிய பொருள்களை பரிசாக கொடுப்பது பல நன்மைகளை தரும்.
நீங்கள் பிறந்த கிழமைகளில் மற்றும் தேதிகளில் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்று அங்கு வரும் குழந்தைகளுக்கு இனிப்பு பிரசாதம் தருவது காரிய வெற்றி அளிக்கும். சனிக்கிழமைகளில் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு பணம் அல்லது ஆடைகளை தானமாக வழங்குவதும் நல்லது. பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்வதும், குடும்ப பெரியவர்கள், கற்றுக் கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெறுவதும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.
கடகம்
எதிர்பார்த்த நல்ல பணி அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கைகூடும்!
கடக ராசியினருக்கு ஆன்மீக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் முன்னேற்றம் தரும் ஆண்டு இது. ஏனென்றால், பாக்கிய, தொழில், லாப ஸ்தான அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு பெற்றுள்ளார்கள். உப ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்தில் பல கிரகச் சேர்க்கை இருப்பதால் வேலையற்றோருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தன ஸ்தானம் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் ராகு, கேது இருந்தாலும், குருவின் பலம் காரணமாக சிக்கல்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
நீண்ட காலம் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நல்ல விதமாக கைகூடி வரும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் மற்றும் பொதுவாழ்வில் உள்ளவர்கள் பொறுமையாக இருக்க வேண்டிய காலம் இது. உங்களுக்கான அங்கீகாரம் மெதுவாகவே வந்து சேரும். பல நல்ல விஷயங்களைக்கூட ரகசியமாக செய்து முடிக்க வேண்டிய காலகட்டம் இது.
குடும்பம், நிதிநிலை
குடும்பத்தில் சில சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். எந்த விஷயத்திலும் வெளிப்படையாக உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும். சுப காரியங்கள் நடக்க இருப்பதால் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பெற்றோர்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் விஷயத்திலும், வாழ்க்கைத் துணையின் தாய், தந்தையர் விஷயங்களிலும் அதிகம் தலையிட வேண்டாம்.
நிதிநிலையை பொறுத்தவரை செலவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கைகளில் சிறிது பணம் வந்தாலும் கூட பழைய கடன்களை அடைத்து விடுங்கள். வர்த்தக ஊக பேரங்களில் ஈடுபடக்கூடாது. கடன் கொடுப்பது மற்றும் வாங்குவது ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மிக கவனம் தேவை.
தொழில், உத்தியோகம்
தொழில் நிலவரத்தை பொறுத்தவரை பலரை வைத்து வேலை வாங்கும் தொழில் மற்றும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் ஆகியவை விரிவடையும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வார்கள். வர்த்தக விரிவாக்கம் இந்த ஆண்டு உண்டு. கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் எதிர்பார்த்த நல்ல பணி அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கைகூடும். பணியிடத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் கண்டிப்பாக முதுநிலை அலுவலர் ஆலோசனை பெறுவது அவசியம். நிர்வாகத்தின் முடிவுகள் கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வது எதிர்கால நலனுக்கு நல்லது.
கலை, கல்வி
சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஊடகத் துறையினருக்கு படைப்புத் திறனை வெளிப்படுத்தும் காலகட்டம் இது. உங்கள் உள்ளுணர்வுகளை காட்சிகளாக வடிவமைக்க காலம் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கும். அதனால் பாராட்டுக்கள் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் வாய்ப்புகள் மூலம் உங்களுடைய புகழ் ஓங்கும்.
கல்வியை பொறுத்தவரை அறிவியல், தத்துவம் மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு சாதனை புரிவார்கள். வெளிநாடு செல்ல ஆர்வமாக இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீட்டு கதவை வந்து தட்டும். ஏற்கனவே விண்ணப்பம் செய்து விசா கிடைக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
நன்மைகள் நாடி வர..
இரவு நேரங்களில் உடல் நல பாதிப்பு, தூக்கம் இல்லாத நிலை ஏற்படலாம். நல்ல ஓய்வு அவசியம். செரிமானம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள ராகு வண்டி வாகனங்களில் நிதானமாக செல்ல வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. அன்னை மற்றும் அன்னை வழி உறவினர்களுக்கு ஆடைகள் மற்றும் அழகிய பரிசு பொருள்கள் வழங்குவது நன்மை தரும்.
பௌர்ணமி நாட்களில் அருகிலுள்ள பெண் தெய்வ கோயில்களில் பசும்பால் அபிஷேகத்திற்கு தருவது நன்மை பல தரும். அத்துடன் சிவலிங்கத்துக்கு வெள்ளை வஸ்திரம் வழங்குவதும், கோயிலில் உள்ள கருப்பு பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை, காய்கறிகள் உண்பதற்கு கொடுப்பதும் நன்மை ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும் கருப்பு நிற ஆடைகளை அணியாமல் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
முயற்சிகள் தான் படிப்படியாக உங்களை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும்!
சிம்ம ராசியினருக்கு இந்த ஆண்டு இறையருளால் விரும்பிய விஷயங்கள் நடந்தேறும். குருவின் ராசியான 5-ம் இடத்தில் உள்ள ராசியதிபதி, சுபர்கள் சேர்க்கை மற்றும் குரு பார்வை பெற்றுள்ளதால் தெய்வ அருள் மற்றும் அதிர்ஷ்டம் மூலமாக எண்ணிய விஷயங்கள் ஈடேறும். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனியின் காரணமாக தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்பட்டாலும் குருவின் சஞ்சாரம் அவற்றை மட்டுப்படுத்தும்.
இதுவரை திருமண விஷயங்களில் தடை தாமதங்களை சந்தித்தவர்கள் நல்ல செய்தியை பெறுவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்த எண்ணம் நிறைவேறும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்கள் போட்டிகளை நேரடியாக எதிர் கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரமாக உங்கள் கருத்துக்களை சொல்லி விடக்கூடாது. பண விஷயங்களில் மற்றவர்களை நம்பிவிட வேண்டாம்.
குடும்பம், நிதிநிலை
கணவன் மனைவியிடையே சில கருத்து வேறுபாடுகள் மற்றும் சந்தேகம் ஆகியவை ஏற்பட்டு விலகும். கோபப்பட்டு எதுவும் பேசி விட வேண்டாம். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய ஆண்டு இது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விஷயத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
குருவின் லாப ஸ்தான நிலை காரணமாக கடன்கள் வசூலாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இருந்தாலும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது இயலாது. வீடு மனை நிலம் ஆகியவற்றை திட்டமிட்டு வாங்கலாம். ஆவணங்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கேட்டவுடன் கிடைக்கிறது என்பதற்காக கடன் வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தொழில், உத்தியோகம்
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் பல மன உளைச்சல் ஏற்படும். தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவற்றில் உள்ள சிக்கல்களை சீர் செய்ய வேண்டிய ஆண்டு இது. மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், கம்ப்யூட்டர் உபகரணங்கள் உற்பத்தி பிரிவினருக்கு இது அதிர்ஷ்டமான காலகட்டம்.
உத்தியோகஸ்தர்கள் உள்ள வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்லலாம் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். அதே வேலையிலேயே வருடத்தின் இறுதியில் பல நல்ல விஷயங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. சிலருக்கு பணியிட மாற்றம் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பொறுமைக்கு ஏற்ற பலன் தரும் ஆண்டு இது.
கலை, கல்வி
இசைத்துறையினர் புகழ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரவும். சினிமா, தொலைக்காட்சி, ஊடகம் உள்ளிட்ட கலைத்துறையினருக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்க தாமதம் ஏற்படும். எந்த விஷயத்தையும் அவசரப்படாமல் அணுக வேண்டும். இந்த ஆண்டு கலைத்துறையினரை பொறுத்தவரை தொடர்ந்த முயற்சிகள் தான் படிப்படியாக உங்களை உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும்.
மாணவர்களை பொறுத்தவரை சட்டம் மற்றும் நிதி, ஆராய்ச்சி படிப்புகள் மிகவும் சாதகமாக இருக்கும். கட்டிடக்கலைத் துறை மற்றும் மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் வெளிநாட்டு பணி வாய்ப்புகளை பெறுவார்கள். தேர்வுகளுக்காக அதிகப்படியான மன உளைச்சல் அடைய வேண்டிய அவசியம் இல்லை. திட்டமிட்டு படித்தால் சிம்ம ராசி மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
உடல் நிலையை பொறுத்தவரை நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல நிவாரணம் ஏற்படும். மலச்சிக்கல், பைல்ஸ், மூட்டு வலி, செரிமான பிரச்சினை ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைகள் விலகும். மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மூலம் உங்கள் உடல் மற்றும் மனதிற்கு அமைதி கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், குரங்குகள் அல்லது நாய்களுக்கு உண்பதற்கு தீனிகள் வழங்குவதும் நன்மைகளை ஏற்படுத்தும். மாற்றுத் திறனாளிகள், துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்குவதும் நல்லது. முடிந்தால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுக்கு தங்கத்தால் ஆன சிறிய பரிசுகளை வழங்குவது நன்மைகளைத் தரும்.
கன்னி
திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த புத்தாண்டில் நல்ல செய்திகள் வந்து சேரும்!
குரு உச்ச பலம் பெறுவதால்
கன்னி ராசியினர் தங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பலனை பெற்று தரும் ஆண்டாக ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். 4-ம் இடத்தில் திக்பலமாக உள்ள பாக்கியாதிபதி சுக்கிரன், ராசி அதிபதி புதனோடு இணைந்து குருவின் பார்வை பெறுவது கன்னி ராசியினருக்கு வீடு, மனை, வாகனம் ஆகிய யோகத்தை வழங்குகிறது. உங்கள் ஆலோசனைகள் பலரது நல்வாழ்விற்கு உறுதுணையாக அமையும்.
ஆண்டின் பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடையும் குரு உச்ச பலம் பெறுவதால் உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்கள் கை கூடி வரும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்கள் வெற்றி பெறுவார்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை கிடைக்கும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் பொது விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.
குடும்பம், நிதிநிலை
குடும்ப நிலையை பொறுத்தவரை கணவன் மனைவி உறவுகளுக்குள் சில சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த புத்தாண்டில் நல்ல செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும்.
ஆண்டின் பிற்பகுதியில் வருமானம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். நிலுவையில் நின்ற கடன்கள் வசூல் ஆகும். ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் திட்டமிட்டு முதலீடுகளை செய்யலாம். பழைய கடன்கள் ஏதாவது இருந்தால் அதை முற்றிலுமாக திருப்பி செலுத்துவதற்கு இது நல்ல தருணம். எந்த ஒரு முதலீட்டையும் தெளிவாக திட்டமிட்ட பிறகே செய்ய வேண்டும். அவசரம் கூடாது.
தொழில், உத்தியோகம்
ஆடிட்டிங், டேட்டா அனலைசிஸ், மென்பொருள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல காலம். உங்களுடைய தனித்திறன்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும். பலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வீட்டு கதவை தட்டும். சிறிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பெரு நிறுவனங்களில் பணியாற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை துறையினருக்கும் இது சாதகமான காலம்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். அதை மனதில் கொண்டு செயல்படுங்கள். தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு நிர்வாகத்துடன் எதிர்பார்த்த நெருக்கம் ஏற்படும்.
கலை, கல்வி
சினிமா, தொலைக்காட்சி, இசை போன்ற கலைத்துறையினருக்கு குருவின் சஞ்சாரம் காரணமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட முயற்சிகளை விட கூட்டாக சேர்ந்து செயல்படும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதனால் எந்த ஒரு விஷயத்திலும் பலரும் ஒன்றாக சேர்ந்து முயற்சித்தால் வெற்றி உறுதி.
மாணவர்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டு வளர்ச்சி சீராக இருக்கும். நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன்களை வெளிப்படுத்தும் ஆண்டு இது. போட்டித் தேர்வுகள் மற்றும் உயர் கல்விக்கான முயற்சிகளில் பலரும் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு செல்வார்கள். வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் கல்வி பெற விரும்புபவர்களுக்கு முயற்சி கைகூடும்.
நன்மைகள் நாடி வர..
அதிகப்படியான வேலை மற்றும் பல சிந்தனைகள் காரணமாக மன அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். பலருக்கு தூக்கம் சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படலாம். அப்படிப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
இயன்ற போதெல்லாம் ஆடுகள் அல்லது பசு மாடுகளுக்கு பசுமையான தீவனங்களை உண்பதற்கு வழங்கலாம். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு பச்சை நிற வஸ்திரங்களை தானமாக கொடுப்பதும் நன்மை பல தரும். ஏழை, எளியவர்கள், பணியாளர்கள் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். முடிந்தவரை மௌன விரதம் இருப்பதும், மாதம் ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதும் முக்கியம்.
துலாம்
அரசியல், பொழுதுபோக்கு, கூட்டுத் தொழில் ஆகியவற்றில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்!
துலாம் ராசியினருக்கு இந்த ஆங்கில புத்தாண்டு திறமையை வெளிப்படுத்தும் காலகட்டமாக அமைகிறது. ஆண்டின் பிற்பகுதியில் 10-ம் இடத்துக்கு மாறும் குரு, உச்ச நிலை அடைவதால் உங்களுடைய திறமை தெரிய வேண்டிய இடத்திற்கு தெரியும். பொறுப்புகளும், உழைப்பும் அதிகரிக்கும். அத்துடன் சிக்கல்களும், போட்டிகளும் உங்களுடைய திறமைக்கு சவாலாக அமையும். இறுதி வெற்றி உங்களுக்கு தான் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறு சிறு மனத்தாங்கல்கள் ஏற்பட்டு விலகும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் தலைமை பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். கருத்து ரீதியாக மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்படும். வம்பு வழக்குகளில் உங்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.
குடும்பம், நிதிநிலை
குடும்பம் மற்றும் கணவன், மனைவி உறவுகளில் உள்ள சிக்கல்கள் இந்த ஆண்டு நல்ல விதமாக தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்த வேண்டும். கல்விச் செலவுகள் அதிகரிக்கும். தொலைதூர உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பழைய சொந்தம் ஒன்று உங்கள் வீடு தேடி வரும்.
முதல் நான்கு மாதங்கள் நிதி நிலையில் சிக்கல்களும், அதன் பிறகு பல்வேறு வரவுகளும் ஏற்படும். வருமானம் அதிகரிப்பதால் பழைய கடன்கள் தீரும். வண்டி வாகனச் சேர்க்கை, சொத்துச் சேர்க்கை ஆகிய சுப விரயங்கள் இந்த ஆண்டு உண்டு. புதிய தொழில் அல்லது முதலீடுகள் மூலம் உங்களுடைய சொத்து மதிப்பு உயரும். ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
தொழில், உத்தியோகம்
சட்டம், நீதி, அரசியல், பொழுதுபோக்கு, கூட்டுத் தொழில் ஆகியவற்றில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். நீண்ட காலமாக தொழில் தொடங்க திட்டமிட்டவர்களுக்கு இது நல்ல காலம். தொழில் கூட்டாளிகள் தாமாக வந்து இணைவார்கள். உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்படும். எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடும் முன்னதாக அதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடங்களில் தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். இருக்கும் வேலையை விட்டு விலகும் எண்ணத்தை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். பணியிடத்தில் மன அமைதி இல்லாத நிலையில் ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும். நல்ல நேரம் கூடிவரும் நேரத்தில் அவசரப்படக்கூடாது. வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
கலை, கல்வி
கலைத்துறையினர், இசைத்துறையினர், சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையினருக்கு இந்த ஆண்டு நல்ல பெயரை பெற்று தரும். மற்றவர்களுடைய புதிய கலைப்படைப்புகளை நீங்கள் வெளியிடுவதன் மூலம் உங்கள் நிறுவனத்திற்கு நல்ல மதிப்பு கிடைக்கும். இசைத்துறையினர் வெளிநாடுகளில் தங்களுடைய திறமைகளை காண்பித்து புகழ் பெறுவார்கள்.
போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு வெற்றி உறுதி. ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் வெளிநாட்டு கல்வி பெற விரும்பும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அதற்கு வருடத்தின் பிற்பகுதி தான் சாதகமாக உள்ளது. மாணவர்களுக்கு நேர மேலாண்மை இந்த வருடம் முக்கியம்.
நன்மைகள் நாடி வர.
உடல் நலனில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு சிகிச்சையால் சரியாகும். இருந்தாலும் அவ்வப்பொழுது தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடல்நலம் மேம்படும். தினசரி நடை பயிற்சி, தியானம் ஆகியவை மிக முக்கியம்.
தினமும் சுத்தமான ஆடைகளை அணிவதுடன், வாசனை திரவியங்களை பயன்படுத்துவதும் நல்லது. முடிந்தவரை வெள்ளை நிற ஆடைகளை அதிகமாக அணிவது, வெள்ளை நிற மலர்கள் மற்றும் பசும்பால் ஆகியவற்றை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு வழங்குவதும் பல நன்மைகளை தரும். கோவில் பணியாளர்கள், அறக்கட்டளை ஊழியர்கள், அனாதை இல்ல பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது பல நன்மைகளை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
குலதெய்வத்தின் அருளால் பலருக்கும் நல்ல தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும்!
அதிர்ஷ்டமான அமைப்பு
விருச்சிக ராசியினருக்கு இது ஒரு அதிர்ஷ்டகரமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்டின் பிற்பகுதியில் பாக்கியஸ்தானத்திற்கு மாறும் குரு உச்ச நிலை பெற்று ராசி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை பார்ப்பது அதிர்ஷ்டமான அமைப்பு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சனி ஏற்படுத்திய குழந்தை பாக்கிய தாமதங்கள் குருவின் பார்வையால் விலகும். குலதெய்வத்தின் அருளால் பலருக்கும் நல்ல தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த முக்கியமான காலகட்டத்தில் நீண்ட கால நன்மை தரும் முதலீடுகள் மற்றும் தொழில்களை தொடங்க திட்டமிட்டு செயல்படுங்கள். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் செல்வாக்கு மற்றும் நற்பெயர் பெறுவார்கள். எதிரிகள் உங்கள் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
குடும்பம், நிதிநிலை
திருமண விஷயங்களில் இருந்த தடைகள் விலகும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பி உற்றார், உறவினர்களை சந்தித்து மகிழ்வார்கள். பலருக்கும் வாழ்க்கைத் துணையின் வழியில் பல்வேறு சொத்துக்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.
நிதி நிலையை பொறுத்தவரை முதல் 5 மாதங்களுக்கு சிரமங்கள் இருந்தாலும் அதன் பிறகு வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய உதவியை நாடி பலரும் வருவார்கள். பழைய கடன்களை அடைத்து விடுங்கள். நிலங்கள் மற்றும் வீடுகளை வாங்கும் பொழுது சட்டப்பூர்வ விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்த பிறகே காரியத்தில் இறங்க வேண்டும்.
தொழில், உத்தியோகம்
மருத்துவம், ஆராய்ச்சி, சுய தொழில் ஆகியவற்றில் நல்ல வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். நிதி சார்ந்த ஆலோசனை வழங்குபவர்களுக்கும் இது அருமையான காலகட்டம். உங்கள் எதிர்கால நலன்களுக்கான திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நேரம் இது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற திட்டங்களை தகுந்த ஆலோசனையுடன் வகுத்துக் கொள்ளும் காலம் இது.
வெளிநாட்டு தொடர்புள்ள பன்னாட்டு நிறுவனங்கள், அரசு உயர் பதவிகள், நிதி சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இது பொன்னான காலம். சாதாரண பதவியில் இருப்பவர்களுக்கு உயர்
பதவிகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாட்டு ப்ராஜெக்ட்களில் பிஸியாக இருப்பார்கள். ஒரு சிலர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்து கடல்கடந்து செல்வார்கள்.
கலை, கல்வி
கலைத்துறையினர், சினிமா, தொலைக்காட்சி மற்றும் இசை ஆகிய துறையில் உள்ள இளம் தலைமுறையினர் புதிய சாதனைகளை செய்வார்கள். சினிமா துறையில் இருப்பவர்கள் தேசிய புகழ் பெறுவார்கள். எழுத்துத் துறையில் இருப்பவர்கள் புதிய நூல்களை வெளியிடுவர். கலைத்துறைகளில் திறமைகள் இருந்தும் நீண்ட காலமாக வெளிவர முடியாத இளம் தலைமுறையினர் இந்த புத்தாண்டில் வெற்றி பெறுவார்கள்.
கல்வியைப் பொறுத்தவரை கணிதம், அறிவியல், இன்ஜினியரிங், நிதி சம்பந்தமான படிப்புகளில் மாணவியர்கள் புதிய சாதனைகளை செய்வார்கள். அரசு மற்றும் தனியார் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்று பதவிகளில் அமர்வார்கள். உயர் கல்வி பயில்பவர்களுக்கு வருடத்தின் பிற்பகுதியில் சில சிக்கல்கள் ஏற்பட்டு விலகும்.
நன்மைகள் நாடி வர..
சனியின் சஞ்சாரம் காரணமாக வயிறு தொடர்பான, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். மேலும், மார்பகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றல் பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் இந்த ஆண்டு கவனமாக இருக்க வேண்டும். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளுங்கள்.
ஆன்மீக வளர்ச்சிக்கு உரிய இந்த ஆண்டில் விருச்சிக ராசியினர் பல தர்ம காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. தினமும் ஏதேனும் ஒரு யோக பயிற்சியை செய்வதும் அவசியம். வார நாட்களில் முடிந்த போதெல்லாம் அருகில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், திருநீறு அபிஷேகம் செய்வதும் நல்லது. காளி மற்றும் துர்க்கை ஆகிய பெண் தெய்வங்களுக்கு செவ்வாய் கிழமைகளில் 27, 54 எண்ணிக்கையில் எலுமிச்சை மாலை அணிவிப்பது மிகவும் நல்லது. முடிந்தால் அருகில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்களுக்கு காலை நேரத்தில் பருப்பு சாதம் பிரசாதமாக வழங்கலாம்.
தனுசு
எந்த ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்னதாக பெற்றோர், பெரியோர்களிடம் ஆலோசனை, ஆசி பெறுவது நல்லது.
குழந்தை பாக்கியம் – தனுசு ராசியினருக்கு இதுவரை தடைபட்ட யோக பலன்கள் இந்த ஆண்டு கையில் வந்து சேரும். ராசியில் இரு சுப கிரகங்கள் உள்ள நிலையில் ராசி அதிபதி குருவின் பார்வை பெற்ற சுப அமைப்புடன் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆண்டின் பிற்பகுதியில் ராசி அதிபதி உச்சம் பெற்று அஷ்டமஸ்தானத்திற்கு செல்ல இருக்கிறார். மறைமுக நன்மைகள் உங்களைத் தேடி வரும்.
அர்த்தாஷ்டம சனி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவார். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் பொதுமக்களின் சிக்கல்களை தீர்க்க களமிறங்குவதன் மூலம் புகழ்பெறுவார்கள். பலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பெற்றோர்கள் ஆதரவு உண்டு. கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும்பொழுது உங்கள் கருத்தை தெளிவாக சொல்லி விடுங்கள்.
குடும்பம், நிதிநிலை
தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கும். சனியின் சஞ்சாரம் காரணமாக குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். வீடுகளுக்கு மராமத்து பணிகளை செய்ய வேண்டும். அன்னையின் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.
ஆண்டின் பிற்பகுதியில் உங்களுடைய வாழ்க்கை துணை மூலம் புதிய வருமானம் கிடைக்கும். வீடு அல்லது மனை வாங்குபவர்கள் அவற்றில் சட்டபூர்வமான சிக்கல் உள்ளதா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஆண்டின் பிற்பகுதியில் கடன் வாங்குவது மற்றும் கொடுப்பது ஆகியவற்றை தவிர்ப்பதே நல்லது.
தொழில், உத்தியோகம்
மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி, கல்வித்துறை ஆகிய துறைகளில் நல்ல வளர்ச்சி உண்டு. கூட்டுத் தொழிலில் ஈடுபட திட்டமிட்டவர்கள் ஜூன் மாதத்திற்கு முன்பாகவே அதை செயல்படுத்த வேண்டும். அதன் பிறகு வழக்கமான பணிகளை மட்டுமே கவனித்து வருவது நல்லது. கடன் பெற வேண்டும் என்றால் அதை அளவோடு பெறவும்.
உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை கல்வி, நிதி, பன்னாட்டு நிறுவனங்கள், ஆலோசனை ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு நிர்வாகத்தின் பாராட்டு கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும்.
சினிமா, தொலைக்காட்சி, கலை மற்றும் ஊடக துறையினருக்கு பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். புதிய கலை படைப்புகள் மூலம் உங்களுடைய புகழ் உயரும். ஒரு சிலர் சமூக ஊடகங்களில் பெயர் பெறுவார்கள். கலைத்துறையினர் ஒப்பந்தங்கள் செய்யும் பொழுது அதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டு.
வெளிநாட்டு மொழிகள், ஆராய்ச்சி, தத்துவம், மருத்துவம் மாணவர்களுக்கு இந்த ஆண்டு பல நன்மைகளை கொண்டு வரும். கல்லூரி படிப்பின் பொழுதே மாணவர்கள் பகுதிநேர வேலை பார்த்து செலவுகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். கல்வியில் ஊக்கம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கூடுதல் நன்மை பெற..
சனியின் சஞ்சாரம் காரணமாக கல்லீரல், வயிற்று கோளாறு, மனச்சோர்வு, மன அழுத்தம், உடல் வலி ஆகியவை ஏற்படும். ஒரு சிலருக்கு பைல்ஸ் தொந்தரவுகள் ஏற்படும். மின்சாரம் மற்றும் இயந்திர பணியில் ஈடுபடுபவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். ஓய்வும் உறக்கமும் தான் இவற்றுக்கு நல்ல மருந்து.
உங்களால் இயன்றவரை குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகளை, உணவை தானமாக வழங்கலாம். பிரதோஷ காலங்களில் நந்திக்கு அருகம்புல் சமர்ப்பணம் செய்வது, சிவபெருமானுக்கு மஞ்சள் அல்லது சந்தனம் சமர்ப்பித்து வழிபடுவது ஆகியவை நல்ல பலன்களை தரும். மாதம் ஒரு முறை குலதெய்வத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வதும் பல நன்மைகளை ஏற்படுத்தும். எந்த ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்னதாக பெற்றோர், பெரியோர்களிடம் ஆலோசனை, ஆசி பெறுவது நல்லது.
மகரம்
சரியான நேரத்திற்கு உண்பது, உறங்குவது, மௌனம் ஆகியவற்றின் மூலம் பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்!
வருடத்தின் மத்தியில் நடக்கும் குரு பெயர்ச்சி
மகர ராசியினருக்கு இந்த ஆங்கில புத்தாண்டு தடைகளை தகர்த்து வெற்றிகளை தரும் முன்னேற்றமான காலகட்டமாக அமைகிறது. திருதிய, வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் ராசி அதிபதி சஞ்சாரம் செய்வதும், வருடத்தின் பிற்பகுதியில் சப்தம ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி அடைவதும் நன்மை பல தரும் அமைப்பாகும். கிடைத்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அரசியல் மற்றும் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும் காலகட்டம் இது. மவுனம் கலைத்து, உங்கள் கருத்துக்களை தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் கிடைக்கும். வருடத்தின் மத்தியில் நடக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர இருக்கிறது. விட்டதை பிடிக்கும் காலகட்டம் இது.
குடும்பம், பொருளாதாரம்
திருமணம் ஆகாதவர்கள், திருமண வாழ்வில் சிக்கல்களை சந்திப்பவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு சந்தானம் பாக்கியம் உண்டு. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளால் பெருமைகள்
வந்து சேரும். விட்டுப் போன உறவுகள் தொட்டுத் தொடர, வீட்டுக் கதவை வந்து தட்டும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மகர ராசியினருக்கு இந்த ஆண்டு பொருளாதார சிக்கல்கள் விலகும். வாழ்க்கைத் துணை மற்றும் அவரது குடும்பத்தவர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் உண்டு. வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதன் பின்னர் அவற்றை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். பங்கு வர்த்தகம் லாபகரமாக இருக்கும்.
தொழில், உத்தியோகம்
அரசு ஒப்பந்த பணிகள், தொழில்நுட்பம், கட்டுமானம், ஓட்டல் மற்றும் மரம் ஆகிய தொழில்துறைகளில் நல்ல லாபம் உண்டு. சிறு வியாபாரிகளுக்கு எதிர்பாராத வளர்ச்சிகள் கிடைக்கும். எழுத்தாளர்கள் நல்ல புகழ் பெறுவார்கள். தொழில் ரீதியாக வெற்றி அடைய உங்கள் முன்னோடிகளின் வழிகாட்டுதல்களை பெற்று செயல்படுவது நல்லது. புதிய பொறுப்புகளை தைரியமாக ஏற்றுக் கொள்ளலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பணியிடங்களில் சக ஊழியர்கள் இடம் சுமுகமாக பழகுவது அவசியம். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் வெளி மாநில, வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். அவற்றை தைரியமாக ஏற்றுக் கொள்ளலாம்.
கலை, கல்வி
தொலைக்காட்சி, சினிமா, இசைத்துறை மற்றும் இதர கலை துறையில் உள்ளவர்களுக்கு புதிய இடங்களில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தும் சூழ்நிலை அமையும். புதிய சிந்தனைகளை தைரியமாக வெளிப்படுத்தி புகழ் பெறுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும்போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஊடகத்துறையினர் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும்.
கல்வியை பொறுத்தவரை மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிநாட்டு பல்கலை கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும். பலரும் அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல பணிகளில் அமர்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் கல்வியை பூர்த்தி செய்வார்கள்.
நன்மைகள் நாடி வர..
உடல் நிலையை பொறுத்த வரை ஜீரண சுரப்பு நீரில் பாதிப்புகள் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் கவனமாக பயணம் செய்ய வேண்டும். வயிறு, இடுப்பு, பிறப்பு உறுப்பு சம்பந்தமான சிக்கல்கள் ஏற்பட்டு சிகிச்சை மூலம் அகலும். சரியான நேரத்திற்கு உண்பது, உறங்குவது, மௌனம் ஆகியவற்றின் மூலம் பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்.
மகர ராசியினர் கோவில்களில் நடைபெறும் உழவாரப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அதிர்ஷ்ட வாழ்வை பெறலாம். ஆசிரியர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களுக்கு பரிசுகள் அளித்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது பல நன்மைகளை தரும். பிறந்த கிழமை அல்லது பிறந்த ஆங்கில தேதியில் சிவபெருமானுக்கு திருநீறு அபிஷேகம், அம்பிகைக்கு சந்தன அபிஷேகம் செய்வதன் மூலம் புண்ணிய பலம் அதிகரிக்கும். புண்ணிய நதிகளில் நீராடுவதும் விசேஷம்.
கும்பம்
தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு உங்களுக்கென ஒரு தனிப்பட்ட இடத்தை இந்த ஆண்டு உருவாக்கிக் கொள்ள முடியும்.
குரு பார்வை..
கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்புகளை எதிர்கால நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்டாக 2026 பிறக்கிறது. அதற்கு ஏற்ப லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை, குரு பார்வையுடன் அமைந்துள்ளது. ஏழரை சனி காலம் இன்னும் முடியவில்லை. 5-ம் இடத்தில் அமர்ந்த குரு, ஆண்டின் பிற்பகுதியில் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் உச்ச பலம் பெற்று அமர இருக்கிறார். அவருடைய பார்வை பலத்தால் தனயோகத்தை ஏற்படுத்த இருக்கிறார்.
அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் நல்லதை சொன்னாலும் கூட அது தவறாக எடுத்துக் கொள்ளப்படும். அதனால் முடிந்த வரை மௌனமாக இருப்பது நல்லது. வருடத்தின் பிற்பகுதியில் உங்களுக்கான சந்தர்ப்பம் அமையும். எந்த ஒரு பிரச்சினையும் உங்கள் அமைதியை பாதிக்காத வகையில் நடந்து கொள்ளுங்கள்.
குடும்பம், நிதிநிலை
சனியின் சஞ்சாரம் காரணமாக குடும்பத்தில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு சரி செய்யப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு எந்த தடையும் இல்லை. பண விஷயத்தில் வாழ்க்கை துணையோடு எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தமான சட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக அதை சீர் செய்யுங்கள். உங்களுடைய தனித் திறன்களை வெளிப்படுத்தும் ஆண்டு இது.
நிதி நிலையை பொறுத்தவரை எதிர்பாராத பண வரவுகள் இந்த ஆண்டு உண்டு. பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். புதிய கடன்களை அளவோடு பெற்று பயன்படுத்திக் கொள்ளவும். முடிந்தவரை நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செய்வது நல்லது. பங்கு வர்த்தகத்தில் அதிகப்படியான முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும்.
தொழில், உத்தியோகம்
தொழில் துறையைப் பொறுத்தவரை கம்ப்யூட்டர் மென்பொருள், மக்கள் தொடர்பு, மருத்துவம், வெளிநாட்டு தொடர்பு ஆகிய துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதுமையான விஷயங்களை செயல்படுத்தி வெற்றி பெறலாம். உங்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு உங்களுக்கென ஒரு தனிப்பட்ட இடத்தை இந்த ஆண்டு உருவாக்கிக் கொள்ள முடியும்.
வங்கித்துறை, கல்வி, மருத்துவம் மற்றும் அரசு பணிகளில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும். பணியிடங்களில் கண்டிப்பாக சக ஊழியர்களுடன் எந்தவிதமான வாக்குவாதங்களிலும் ஈடுபட வேண்டாம். பணி நேரம் அதிகரித்தாலும் அவற்றை அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலம் நன்மை ஏற்படும். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தவும்.
கலை, கல்வி
இசைத்துறை, சினிமா, தொலைக்காட்சி, ஊடகம் ஆகிய துறையினர் தொழில் சார்ந்த அங்கீகாரம் பெறக்கூடிய காலகட்டம் இது. உங்களுடைய திறமைகளை திட்டமிட்டு வெளிப்படுத்துவதன் மூலம் நீங்கள் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் கூறும் விமர்சனங்களை மனதில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. வெளி மாநிலங்களில் உங்கள் புகழ் பரவுவதற்கான சூழ்நிலை உருவாகும்.
கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறை மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள். போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு தங்கள் அன்னையின் ஆசிகளை பெற வேண்டும். வேலை தேடுபவர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அல்லது கைக்குட்டைகளை பயன்படுத்துவது அதிர்ஷ்டம் தரும்.
நன்மைகள் நாடி வர..
நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு வைத்தியம் மூலம் விலகும். சரியான நேரத்திற்கு உணவு உண்பதையும், உறங்குவதையும் மேற்கொள்ள வேண்டும். அடிவயிற்றில் வலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். நீண்ட கால நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் போதிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரவாணிகள் ஆகியோருக்கு உணவு மற்றும் பணம் தானமாக தருவது நன்மை ஏற்படுத்தும். அருகில் உள்ள கோவிலில் கருவறையில் தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் தானமாக வழங்கி வரவும். இதுவரை போகாத கோவிலுக்கு சென்று அங்குள்ள மூலவருக்கு மஞ்சள் நிற மாலைகளை சமர்ப்பித்து, வணங்கி வழிபடுவது நல்லது. அருகிலுள்ள கோவிலில் உங்களால் முடிந்த சிறிய திருப்பணிகளை வாரம் ஒரு முறை செய்து வந்தால் பல சிக்கல்கள் அகலும்.
மீனம்
இந்த ஆங்கில புத்தாண்டு அரசியல் துறையினருக்கு ஒரு விடிவெள்ளியாக அமையும்.
இறையருளால் நல்ல விஷயங்கள் நடக்கும்
மீனம் ராசியினருக்கு இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலன் தரும் ஆண்டாக இந்த ஆங்கில புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் ராசி அதிபதி பஞ்சம ஸ்தானத்தில் உச்சகதியில் அமர்வது, ராசியை பார்வை செய்வது ஆகியவை யோகமான அமைப்பு ஆகும். ஜென்ம சனிக்கு ராசி அதிபதி குருவின் பார்வை கிடைப்பதால் பொறுமைக்கு ஏற்ற நல்ல பலன்கள் வீடு வந்து சேரும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படும். ஜூன் மாதம் வரை சில சங்கடங்கள் இருந்தாலும் அவற்றை சமாளித்துக் கொள்வீர்கள்.
அரசியல் மற்றும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த காலங்கள் சோதனையாக அமைந்திருக்கும். இந்த ஆங்கில புத்தாண்டு அரசியல் துறையினருக்கு ஒரு விடிவெள்ளியாக அமையும். உங்கள் அறிவுரைகள் பலரது நல்வாழ்க்கைக்கு அடிப்படையாக அமையும். துன்பங்களையே சந்தித்து வந்த உங்களுக்கு இறையருளால் நல்ல விஷயங்களும் நடக்கும் என்று இந்த புத்தாண்டு உறுதியளிக்கிறது. புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.
குடும்பம், நிதிநிலை
இல்ல துணையோடு இதுவரை இருந்த சண்டை சச்சரவுகள் படிப்படியாக விலகும். வீடு அல்லது நிலம் வாங்குவதில் இருந்த தடை தாமதங்கள் விலகும். கண்ணீர் விட்டு அழுத இரவுகள் இனிமேல் இல்லை. குடும்ப அங்கத்தினர் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்கள் மீது உண்மையாக பாசம் காட்டும் உறவுகள் தேடி வருவார்கள். உண்மையான நண்பர்களை கடந்த காலங்களில் தெரிந்து கொண்ட நீங்கள் அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டிய காலகட்டம் இது.
செலவுகள் அதிகமாக ஆனாலும் அதற்கேற்ற வரவுகள் படிப்படியாக அதிகரிக்கும். உங்களுடைய முதலீடுகள் சிறிதாக இருந்தாலும் அதற்கேற்ற லாபம் வந்து சேரும். செலவு விஷயங்களில் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். பணவரவு ஏற்பட்டால் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்.
தொழில், உத்தியோகம்
தொழில் துறையை பொறுத்தவரை கடந்த கால சிரமங்களுக்கு ஏற்ற பலன்கள் இந்த ஆண்டு கைவந்து சேரும். கல்வி, ஆலோசனை, நீதித்துறை, மருத்துவம், ஆன்மீகம் ஆகிய துறையில் உள்ளவர்களுக்கு சமூக மதிப்பு அதிகரிக்கும். பலர் சுயதொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்துவார்கள். நிலுவையில் இருந்த கட்டுமான பணிகள் நல்லவிதமாக நிறைவேறும். தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் கையில் கிடைக்கும்.
அரசு பணி, ஆசிரியர்கள், வங்கிப் பணி, நிதி நிறுவனம், வெளிநாட்டு நிறுவனம் ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இது முன்னேற்றமான ஆண்டு. பதவி உயர்வுகள் உங்களைத் தேடி வரும். அத்துடன் பல சிக்கல்களும் உடன் வரும் என்பது உங்களுக்கே தெரியும். அதனால் எந்த விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனடியாக தீர்மானமான முடிவெடுக்க வேண்டும். அமைதியாகவும், நிதானமாகவும் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.
கலை, கல்வி
கலைத்துறையினர், இசைத் துறையினர், சினிமா, தொலைக்காட்சி, ஊடகம் ஆகிய துறைகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்த மீனம் ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் இப்போது விலகி விடுவார்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட்டால் எந்த துறையிலும் நீங்கள் இந்த ஆண்டு நீங்கள் உச்சம் தொட முடியும்.
மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் ஆலோசனை மற்றும் ஆசி பெற்றால் தேர்வுகளில் நிச்சயம் நல்ல வெற்றி பெற முடியும். உங்களுடைய கல்வித் தொகையை உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தந்து உதவி செய்வார்கள். சட்டம் மற்றும் அறிவியல் துறையில் மாணவ மாணவியர்கள் இந்த ஆண்டு சாதனை புரிவார்கள். மாணவர்களுக்கு இது தனி திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் ஆண்டாக மலர்கிறது.
நன்மைகள் நாடி வர..
உடல் நிலையை பொறுத்தவரை எலும்பு சம்பந்தமான சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். ஏற்கனவே மூட்டு வலி, கை கால் வலி உள்ளவர்கள் தொடர்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மெதுவாகவே பயணியுங்கள். தலை சுற்றல், வாந்தி, கை கால்களில் வீக்கம், அடி வயிற்றில் வலி ஆகிய பிரச்சினைகள் இருந்தால் கண்டிப்பாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அனாதை ஆசிரமங்களுக்கு இரும்பு பாத்திரங்களை முடிந்த வரை தானமாக வழங்கலாம். அதன் மூலம் சனியின் பாதிப்புகள் விலகும். ராசி அதிபதி குருவின் பலத்தை முழுமையாக பெறுவதற்காக வியாழக்கிழமைகளில் பொன்னிற ஜாங்கிரி இனிப்பை கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்கலாம். பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு நீங்கள் செய்யும் சிறிய அளவு திருப்பணியும் உங்கள் நல்வாழ்க்கைக்கு உதவியாக அமையும்.

