2025 லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) தொடர் எதிர்வரும் நவம்பர் 27 தொடக்கம் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இந்தாண்டு ஆறாவது அணியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘அடுத்தாண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு நவம்பர் – டிசம்பர் காலப்பகுதியில் எல்.பி.எல். தொடரை நடத்த திட்டமிடப்பட்டது’ என்று எல்.பி.எல். தொடரின் பணிப்பாளர் சமன்த தொடன்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இம்முறை தொடரில் ஆறு அணிகளை இணைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் ஐந்து பருவங்களிலும் கொழும்பு, காலி, கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து அணிகளே பங்கேற்றன. ‘ஆறாவது அணிக்கான உரிமையாளர் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்று தொடன்வெல்ல தெரிவித்தார்.
ஆறாவது அணியை உள்ளடக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை நீண்ட காலமாக பரிசீலித்து வருகிறது. எனினும் அணி உரிமையாளர் விவகாரத்தில் எல்.பி.எல். கடந்த காலங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்த கடப்பாடுகளை பின்பற்ற தவறியதாக கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் நீக்கப்பட்டனர். இந்த இரு அணிகளுக்குமான புதிய உரிமையாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று எல்.பி.எல். தொடரின் ஆரம்பத்தில் இருந்த அணி உரிமையாளர்கள் யாரும் தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.