ஆஸ்திரேலியா – மெல்பேர்ண் தெற்மேற்கிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய சிறார் பராமரிப்பு ஊழியர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், சுமார் ஆயிரத்து 200 சிறார்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
சிறார்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோசுவா டேல் பிரவுன் என்ற 26 வயது நபர் 2022 முதல் 2023 வரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஐந்து முதல் 12 வயதுடைய 8 சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என பொலிஸார் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சேர்ந்த சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ள போதிலும்,குறிப்பிட்ட நபர் 2017 முதல் வேறு 17 சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் பணியாற்றியுள்ளதால் அங்கும் துஸ்பிரயோகம் இடம்பெறலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அந்த நபரின் பராமரிப்பி;ன் கீழ் இருந்தனரா என்பதை உறுதி செய்ய உதவுவதற்காகவே சந்தேகநபரின் பெயரை வெளியிட்டதாக விக்டோரியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விக்டோரியா மாநில பிரீமியிர் கவலை வெளியிட்டுள்ளார். சிறார்களின் நலன் பாதுகாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், சிறார் பராமரிப்பு நிலைய சட்டங்களை கடுமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் மற்றுமொரு நபரும் சிக்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.