துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சாளர்களை வைபவ் சூரியவன்ஷி நையப்புடைக்க, இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
15ஆவது பிறந்த தினத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வைபவ் சூரியவன்ஷி 95 பந்துகளில் 9 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களை விளாசி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையை நிலைநாட்டினார்.
எவ்வாறாயினும்,,இங்கிலாந்துக்கு எதிராக டோன்டன் விளையாட்டரங்கில் 2002இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அம்பாட்டி ராயுடு ஆட்டம் இழக்காமல் குவித்த 177 ஓட்டங்களே இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையாக தொடர்ந்தும் இருக்கின்றது.
வைபவ் சூரியவன்ஷி குவித்த அபார சதம், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 433 ஓட்டங்களைக் குவித்தது.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். கோலாலம்பூரில் கத்தாருக்கு எதிராக பங்களாதேஷ் 7 விக்கெட்களை இழந்து பெற்ற 363 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இதற்கு முன்னர் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

