எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் இன்று (9-ம் தேதி) தொடங்குகிறது.
வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, கொரியா, ஹாங் காங், எகிப்து, தென் ஆப்பிரிக்கா, போலந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய 12 நாடுகள் கலந்து கொள்கின்றன.
போட்டிகள் எஸ்டிஏடி அகாடமி மைதானம், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆகியவற்றில் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.3.30 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது
இந்தத் தொடருக்கான 4 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டெல்லியை சேர்ந்த அனஹத் சிங்கும் அணியில் உள்ளார். அபய் சிங், இந்திய ஸ்குவாஷில் முதல்
நிலை வீரராக உள்ளார். அதேவேளையில் அனஹத் சிங், முதல் நிலை வீராங்கனையாக வலம் வருகிறார். ஜோஷ்னா சின்னப்பா, காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
வேலவன் செந்தில் குமார் முதன்முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தது. அதேவேளையில் எகிப்து தங்கப் பதக்கமும், மலேசியா வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தன.

