இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இரண்டு கை திறன்கொண்ட சுழல்பந்துவீச்சாளர் ஷஷினி கிம்ஹானி இடம்பெறுகிறார்.
17 வயதுடைய இடதுகை சுழல்பந்துவீச்சாளரான கிம்ஹானி வலதுகையால் பந்துவீசக்கூடிய ஆற்றல் மிக்கவர்.
இந்த மாதம் 9ஆம் திகதி தனது 17ஆவது பிறந்தநாளை கொண்டாடிய கிம்ஹானி, ஐந்து மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
அத்தடன் அண்மையில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ரி20 தொடரிலும் அவர் 6 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார்.
19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய ரஷ்மிக்கா செவ்வந்தியும் இலங்கை மகளிர் அணியில் இடம் பிடித்துள்ளார். அவர் ஒரு மகளிர் சர்வதேச ரி20 போட்டியில் விளையாடியபோதிலும் அவருக்கு பந்துவீசவோ, துடுப்பெடுத்தாடவோ அவசியம் ஏற்படவில்லை.
சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் 23 வயதான வேகப்பந்துவீச்சாளர் காவியா காவிந்தி பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த விராங்கனைகளைவிட ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம, நிலக்ஷிகா டி சில்வா, இனோக்கா ரணவீர ஆகிய அனுபவசாலிகள் அணியில் இடம்பெறுகின்றனர்.
எவ்வாறாயினும் நியூஸிலாந்துக்கு அண்மையில் விஜயம் செய்த மூத்த வீராங்கனைகளான அனுஷிக்கா சஞ்சீவனி (35 வயது), சுகந்திகா குமாரி (33), அச்சினி குலசூரிய (34) ஆகியோரை தெரிவாளர்கள் புறக்கணித்துள்ளனர்.
இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இளம் வீராங்கனைகளைத் தயார்படுத்தும் எண்ணத்துடன் தெரிவாளர்கள் அவர்களை ஓரங்கட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது.

