வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களால் மிக இலகுவாக நியூஸிலாந்து வெற்றிகொண்டது.
2025- 27 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.
இந்த வருடம் தனது 31ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய பின்னர் நியூஸிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜேக்கப் டவி, இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளை இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சுருட்ட உதவினார்.
முதலாவது இன்னிங்ஸிலும் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இருக்கவில்லை.
கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் முதலாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரகாசிக்கத் தவறி தோல்வியைத் தழுவியது.
கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

