1.7 C
Scarborough

வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்!

Must read

தென்அமெரிக்காவில் உள்ள நாடு வெனிசுலா. அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பகை நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வற்புறுத்தி வந்தார். போதைப்பொருள் கடத்த வெனிசுலா உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அமெரிக்கா நேரடி நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியது. போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகத்தின்பேரில், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதிகளில் செல்லும் படகுகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதுவரை 35 படகு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 115 பேர் பலியாகி உள்ளனர்.

தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற அமெரிக்கா திட்டமிடுவதாகவும், எண்ணெய் வளத்தை கைப்பற்ற முயற்சிப்பதாகவும் வெனிசுலா அதிபர் குற்றம்சாட்டி வந்தார். விரைவில், வெனிசுலா மீது தாக்குதல் நடத்த உத்தரவிடுவேன் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலையில், வெனிசுலா மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. தலைநகர் கராகஸ் நகரில் அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்று குண்டுகளை வீசின. இதனால் வெனிசுலாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையே, புளோரிடாவில் உள்ள தனது கிளப்பில் கடந்த 2 வாரங்களாக முகாமிட்டுள்ள டிரம்ப், அங்கிருந்தபடி தனது சமூக வலைத்தள பக்கத்தில், வெனிசுலா தாக்குதல் செய்தியை பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. வெனிசுலா அதிபர் மதுரோவும், அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். மீதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். வெனிசுலா நாட்டை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என்றும் டிரம்ப் கூறியிருந்த நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெனிசுலாவின் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெனிசுலாவில் எண்னெய், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் கவனித்து வந்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article