அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு காரணமாக, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 7,000 பாடசாலைகளில் 1.6 மில்லியன் மாணவர்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காக, ஒரு மாணவருக்குத் தலா 110 ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது நிலவும் சந்தை விலையேற்றத்தால் இந்தத் தொகையைக் கொண்டு சத்தான உணவை வழங்குவது விநியோகஸ்தர்களுக்கு கடினமாக உள்ளது.
குறிப்பாக, இவ்விநியோகஸ்தர்களில் பெரும்பாலானோர் சமூர்த்திப் பயனாளிகள் என்பதால் இச்சுமையை அவர்களால் தாங்க முடியாதுள்ளது.
இதன் காரணமாக மாணவர்களின் போஷாக்கு நிலையை உறுதிப்படுத்த, ஒரு மாணவருக்காக ஒதுக்கப்படும் நிதியை உடனடியாக உயர்த்துமாறு அவர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

