லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு போர் மூண்டது. இந்த போரில் ஹிஸ்புல்லா பெரும் இழப்பை சந்தித்தது.
இந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேலுடனான போரை நிறுத்த ஹிஸ்புல்லா ஒப்புக்கொண்டது.
இதையடுத்து ஹில்புல்லா ஆயுதக்குழுவினர் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்க லெபனான் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இஸ்ரேலுடனான மோதலின்போது எல்லையில் ஹிஸ்புல்லா பயன்படுத்திய ஆயுதக்கிடங்குகளும் லெபனான் ராணுவம் வசம் சென்றுள்ளது. அந்த ஆயுதக்கிடங்குகளில் உள்ள ஆயுதங்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஆயுதங்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.