இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி மணிப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளளன.
மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பின்னர் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு செல்லவுள்ளார்.
பிரதமர் மோடி மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மே மாதத்தில் மணிப்பூரில் இரு இனக் குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
வன்முறைக்கு பின்னர் பிரதமர் மோடி ஒருமுறை கூட மணிப்பூருக்கு சென்றிருக்கவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் முதல் முறையாக மணிப்பூருக்கு பிரதமர் வரவுள்ளதாக மிசோரம் அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பிரதமரின் வருகை தொடர்பான இறுதி பயணத் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.