14.9 C
Scarborough

வன்னி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிக்கை நீதிமன்றில்

Must read

முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளின் உரிமையாளர்களை அடையாளம் காண வசதியாக, எலும்புக்கூடு மீட்பு பணியை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி, புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட ஏனைய பொருட்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 2024 ஜூலை 15 இல் நிறைவடைந்தபோது, 52 பேரின் எலும்புகள் மீட்கப்பட்டன.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி முல்லைத்தீவு நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றில் இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ கடந்த வார இறுதியில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டு அறிக்கைகள் என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.”

முன்னதாக, வெகுஜன புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களுடையது என அடையாளம் காண தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி உறவினர்கள் நீதிமன்றத்தில் பல வாக்குமூல மனுக்களை சமர்ப்பித்திருந்தனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டால், மனித எலும்புகளின் அடையாளத்தைக் கண்டறிவது எளிதாக இருக்குமென வைத்தியர் வாசுதேவ நம்பிக்கை தெரிவித்தார்.

“இரண்டாவது அறிக்கையில் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இலக்கத்தகடுகள் ஆடைகளில் பொறிக்கப்பட்ட இலக்கங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலக்கத்தகடுகளுக்குரியவர்களின் உறவினர்கள் யாராவது முன்வந்தால் இறந்தவர்களை நாங்கள் இலகுவாக இனங்காண முடியும்.”

புதைக்கப்பட்டவர்களின் உயிர் தரவுகள் அடங்கிய இறுதி அறிக்கையை ஆறு வார காலத்திற்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

‘இறுதி அறிக்கை எதிர்வரும் ஆறு வார காலங்களில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது இறுதி அறிக்கையின் போது சட்ட வைத்தியர்களின் பூரண அறிக்கை இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள்? என்ன காரணத்தினால் இறந்தார்கள்? அவர்களின் வயது, உயரம் போன்ற விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் ஆறு வார காலத்தில் சமர்ப்பிக்கப்படும்.”

கொக்குத்தொடுவாய் விசாரணைக்கு முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ, குறித்த புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புகள் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சட்டவிரோதமாக புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என  2024 மார்ச் மாதம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் முடிவுக்கு வந்தார்.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில் மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் படுகொலை தொடர்பான வழக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article