அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளில் இருந்து மீள்வதற்காக சில வரிகளில் இருந்து வணிகங்களுக்கு ஆறு மாத கால சலுகைக்காலம் வழங்குவதாக ஒன்றோரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது Beer Wine மற்றும் மதுபான வரி மற்றும் Gasoline வரி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண ரீதியாக நிர்வகிக்கப்படும் வரிகள் ஏப்ரல் 1, 2025 இல் இருந்து ஒக்டோபர் 1, 2025 வரை ஒத்திவைக்கப்படும் என்று ஒன்றோரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் வணிக நிறுவனங்களுக்கு பெரிதும் உதவும் என ஒன்றோரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
இச்சலுகை எரிபொருள் வரிகள் மற்றும் தொழிலாளர்கள் சுகாதார வரிகள் போன்ற மாகாண ரீதியாக நிர்வகிக்கப்படும் வரிகளை செலுத்தும் நிறுவனங்களுக்கானது என்று கூறும் ஒன்ராறியோ நிதி அமைச்சர் பீட்டர் பெத்லென் பால்வி இதன் மூலம் வணிகர்கள் ஆறு மாதங்களுக்கு வட்டி இல்லாத கடனையும் பெற முடியும் என அறிவித்துள்ளார்.
கடந்தவாரம் உலக நாடுகள் பலவற்றின் மீது வரிகளை விதித்த அமெரிக்காவின் பிடியிலிருந்து கனடா தப்பித்த போதும் கனடா-அமெரிக்கா-மெக்ஸிக்கோ ஒப்பந்தத்தின் மூலம் (CUSMA) இரும்பு மற்றும் அலுமினியம் மற்றும் வாகன இறக்குமதிகளுக்கு உட்படாத பொருட்களுக்கு இன்னும் 25 சதவீத வரிகள் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கனேடிய அரசாங்கமும் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்குள் அடங்காத அமெரிக்க கார்கள் மீது 25 சதவீத எதிர் வரியை அறிமுகப்படுத்தியிருந்தது. இவற்றின் விளைவாக சந்தைகள் மீண்டும் சரிந்து வருகின்றன. நுகர்வோர் நம்பிக்கையும் குறைந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து முதலீடு தேக்கமடைந்துள்ளது ஆகையால் ட்ரம்ப ஓர் பொது இணக்கப்பாட்டிற்கு வருவார் என தான் நம்புவதாக போர்ட் கூறுகிறார்.