17.8 C
Scarborough

வடக்கை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு கனடா முழு ஆதரவு: தூதுவர் உறுதி!

Must read

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான கனடா தூதுவருக்கும், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம், காணி பிரச்சினை, வடக்கை இலக்காகக் கொண்டு அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தியால் நிச்சயம் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், தமிழ் மக்களும் முழு அளவில் அரசாங்கம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், வடக்கு, கிழக்கை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு கனடாவும் உதவி நல்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கனடா தம்மால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்கும் என தூதுவர் பதிலளித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தை போல இல்லாமல் இந்த அரசாங்க ஆட்சியாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே தற்போது இருக்கின்றார்கள் எனவும், தற்போதைய ஜனாதிபதியும் சர்வ அதிகாரம் கொண்டவராக இல்லாமல் மக்களின் தலைவனாக செயற்படுகின்றார் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முதலீடுகள் செய்வதற்கான சூழல் பற்றியும் பேசப்பட்டுள்ளது.

வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்கு வைத்து கனடாவால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் வெற்றியளிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள், தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

இலங்கைக்கான கனடா தூதுவர் தமது சேவைக்காலம் முடிவடைந்து இம்மாதத்துடன் தாயகம் திருப்பவுள்ளார். அவர் ஆற்றிய சேவைகளுக்கு தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article