நாடு தளவிய போராட்டத்தை மேற்கொள்வோம்.. பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை.
ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தியினால் வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தன்னிச்சையான செயற்பாடுகளால் வடக்கு கல்வி சீரழிய விடமாட்டோம் எனத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது ஆசிரியை மற்றும் அதிபர்களின் பலத்தை விரைவில் காட்டுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கல்வியை ஆட்சியில் உள்ள ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தியின் தொழில் சங்கத்துக்கு ஏற்ற வகையில் செயல்படுத்த நினைப்பதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
வடக்கில் இடம் பெற்ற ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடுகள் பாரபட்சம் இடம்பெற்றமை ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் நீதி கேட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் வடமாகாண ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரும் ஒழித்துத் திரிகின்றனர்.
நான் வடக்கில் பல ஆளுநர்களை கண்டிருக்கிறேன் அவர்களுடன் பல்வேறு சந்திப்புக்களை செய்திருக்கிறேன் ஆனால் தற்போதைய ஆளுநரை சந்திக்க முடியாமல் உள்ளது.
ஜே வி பி என் கை பொம்மையாக செயற்படும் தற்போதைய வடமாகாண ஆளுநர் எமது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை தெரிந்து எம்மை சந்தித்தால் ஜே வி பி என் நிகழ்ச்சி நிரல் தெரிந்துவிடும் என்பதற்காகவே ஒழிக்கிறார்.
மூன்று நாட்களாக பாடசாலைக்கு செல்லாது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சந்திக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ள ஆளுநர் எவ்வாறு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்.
ஊழல்களை ஒழிக்கப் போகிறோம் என ஆட்சிக்கு வந்த ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி வடக்கு கல்வியை முடக்கும் வகையிலும் அதிபர் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்காமல் செயற்படுவதும் சர்வாதிகார ஆட்சியை கொண்டு செல்வதாகவே பார்க்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவை விரட்டியடிப்பதற்கு அதிபர் ஆசிரியர்களின் போராட்டமே ஆரம்ப புள்ளி என்பதை இந்த அரசாங்கம் நன்கு அறியும்.
இடமாற்றத்தின் போது எமது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்துவிட்டு நீங்கள் நினைத்தது போல வடக்கு கல்வியை நடத்தலாம் என நினைத்து விடக்கூடாது.
ஆகவே எமது போராட்டத்தை வாக்குறுதிகளின் அடிப்படையில் முடிவுறுத்துகிறோம் ஆனால் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாத விடுமானால் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டங்களுக்கு அழைப்பு விடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

