ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
’கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், இப்போது அதில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. அப்படத்துக்கு முன்னதாக ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன.
ரஜினி – கமல் – லோகேஷ் கனகராஜ் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் வெளியீடு ஆண்டு இறுதிக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக, ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி – கமல் இணைந்து நடிப்பதற்காக கதையொன்றை கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அப்படம் அந்தச் சமயத்தில் கைகூடவில்லை. தற்போது அக்கதையினை தான் பேசி எடுக்கவுள்ளார் எனத் தெரிகிறது. சமீபத்தில் ரஜினி – கமல் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் இது குறித்து பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.