திங்கட்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் லிபரல் கட்சியினர் பெரும்பான்மை அரசாங்கத்தை கைப்பற்றுவார்கள் என்று எதிர்வு கூறியுள்ள கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியன் திங்கட்கிழமை இரவு லிபரல் கட்சியின் பெரும்பான்மை அரசாங்க வெற்றியை கொண்டாட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது 91 வயதாகும் ஜீன் கிரெட்டியன், 1993 இற்கும் 2003 க்கும் இடையில் மூன்று பெரும்பான்மை லிபரல் அரசாங்கங்களை வழிநடத்தியவர் ஆவார். அத்துடன் அவர் இன்னும் லிபர்கள் மீது ஈர்ப்பாக இருந்து வருவதுடன் தற்போதும் பிரச்சார மேடைகளில் பங்குபற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்கள் மற்றும் 51வது மாநிலமாக இணைப்பது தொடர்பான மிரட்டல்கள் போன்றவற்றால் கனேடியர்கள் முன் எப்போதும் இல்லாத அளவு ஒன்றுபட்டுள்ளதாகவும் இதனால் ட்ரம்புக்கு நன்றி கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய கருத்துக்கணிப்புக்களில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல்கள் முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டாலும், பியர் பொலிவ்ரே தலைமையிலான கொன்சவேடிவ் கட்சியுடன் இன்னும் நெருக்கமான போட்டிநிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்த பொலிவ்ரே சமூக ஊடகங்களில் வெளிவரும் கருத்துகள் அவமதிப்பை ஏற்படுத்தக்கூடியது மற்றும் அவை பொய்யானது என்றும் கூறினார்.
தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது கனடாவின் ஒற்றுமையை வலியுறுத்தும் கார்னி, கனேடியர்கள் ஒரே குடையின் கீழ் செயற்பட்டால் அமெரிக்காவின் வர்த்தகப்போரில் வெல்வது மட்டுமன்றி G7 நாடுகளின் கூட்டமைப்பிலும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கலாம் என்றார். கனடா மிகக் குறைந்த வளமுள்ள நாடு என்று Bloc Québécois தலைவர் Yves-François Blanchet கூறிய கருத்தையும் கார்னி முற்றாக நிராகரித்தார்.
திங்கட்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான போட்டியில் Vancouver இன் பல பகுதிகள் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற இடங்களில் லிபரல், கொன்சவேடிவ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி இடையே மும்முனை போட்டி நிலவி வருகின்றபோதும் புதிய ஜனநாயக கட்சி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாகவும் தற்போது லிபரல் மற்றும் கொன்சவேடிவ் கட்சிகளுக்கிடையேயான போட்டியாகவே களநிலமை உள்ளதாகவும் கூறப்படுகிறது.