ஒன்டாரியோ மாநில தேர்தல் பிப்ரவரி 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஒன்டாரியோ முற்போக்குப் பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) சார்பில் ஸ்காபரோ-வடக்கு தொகுதியில் மூன்றாவது முறையாக ரேமண்ட் ஷோ(Raymond Cho) களமிறங்கியுள்ளார். ஷோவின் தேர்தல் பிரசார அலுவலகம் சனிக்கிழமை (8ஆம் திகதி) திறந்து வைக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் பாரிய பிரசாரத்தையும் அன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர். தமிழர்கள் மத்தியிலும் ரேமண்ட் ஷோ பெரும் ஆதரவைப் பெற்ற ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தல் ஒன்டாரியோ மக்களைப் போன்று கனடாவிற்கும் முக்கியமானது எனக் கூறிய ரேமண்ட் ஷோ, ஒன்டாரியோவைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பிரசார அலுவலகத் திறப்பு விழாவில் மேலும் உரையாற்றிய ஷோ,
“இந்த தேர்தல் ஒன்டாரியோ மாநிலத்திற்கு முக்கியமானது. மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பிற்கு எதிராகவும், மாநிலத்தின் வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்கும் இந்தத் தேர்தல் முக்கியமானது. டக் போர்ட் தலைமையில் முற்போக்கு பழைவாதக் கட்சியின் ஆட்சி மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும். கனடா மிகப் பெரிய வர்த்தகப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இதனை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைந்து மாநிலத்தின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். கனடா விற்பனைக்கு அல்ல. அத்துடன் அமெரிக்காவின் 51ஆவது மாநிலம் என்பதையும் மறுக்கிறோம். இந்த நெருக்கடியில் இருந்து மாநிலத்தை மீட்கும் ஒரே தலைவர் டக் போர்ட் மட்டுமே. அவரின் தலைமையில் வேலைவாய்ப்புகளும், மக்களின் பொருளாதாரமும் பாதுகாக்கப்படும்.
இந்தத் தேர்தலில் ஸ்காபரோ தொகுதி மிக முக்கியத்துவம் பெறுகிறது. லிபரல் கட்சி ஆட்சிய இருந்த போது நீண்டகாலம் புறக்கணிக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு முற்போக்கு பழமைவாத கட்சியில் தீர்வு காணப்பட்டுள்ளது.
பிர்ச்ச்மவுண்ட் மருத்துவமனை (Birchmount Hospital) நிர்மாணிக்கப்பட்டதுடன் மாநிலத்தின் முதல் மருத்துவக் கல்லூரியும் ஸ்காபரோவில் நிறுவப்பட்டுள்ளது.
“ஸ்காபரோ மெட்ரோ ரயில்வே நீட்டிப்பு” மற்றும் “ஷெப்பர்ட் ஈஸ்ட் மெட்ரோ நீட்டிப்பு” திட்டங்களும் இதில் அடங்கும்.
லிபரல் அரசு புறக்கணித்த ஸ்காபரோ மேம்பாட்டு திட்டங்களை, முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசு நிறைவேற்றும்” என்று தெரிவித்தார்.
மாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள்
கடந்த வியாழக்கிழமை (பெப்ரவரி 1ஆம் திகதி ) ஸ்காபரோவில் உரையாற்றிய டக் போர்ட்,
ஷெப்பர்ட் ஈஸ்ட் மெட்ரோ நீட்டிப்பு திட்டம் ஒரே ஆண்டிற்குள் தொடங்கப்படும் என உறுதியளித்தாா்.
401 நெடுஞ்சாலை (Highway 401) மேம்பாட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.
Victoria Park Ave – Avenue Rd – Neilson Rd வரையிலான தெற்கு பாதை விரிவாக்கம்.
Kennedy Rd அருகே புதிய பாதை சேர்ப்பு.
Leslie St & Bayview Ave பகுதியில் பாலம் மாற்றம் மற்றும் புனரமைப்பு.
ஆகிய திட்டங்களை அறிவித்திருந்தார்.
நாங்கள் வெற்றி பெற்ற பின்னர், மேலும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும். வாழ்வாதாரச் செலவு குறைக்கப்படும். இந்தப் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
ஒன்டாரியா மாநில தேர்தல் பெப்ரவரி 27ஆம் திகதி நடைபெறுவதுடன் முன்கூட்டிய வாக்குஃப் பதிவு பெப்ரவரி 20 முதல் 22 வரை நடைபெற உள்ளது.