ஒன்டாரியோ மாநிலத் தேர்தலில் ஸ்காபரோ-வடக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள ரேமண்ட் ஷோ (Raymond Cho) தனது தேர்தல் பிரசார அலுவலகத்தை நேற்று (08) சனிக்கிழமை திறந்துவைத்து, பாரிய பிரசாரத்தை ஆரம்பித்தார்.
ஒன்டாரியோ மாநில தேர்தல் பிப்ரவரி 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் ஒன்டாரியோ முற்போக்குப் பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) சார்பில் ஸ்காபரோ-வடக்கு தொகுதியில் மூன்றாவது முறையாக ரேமண்ட் ஷோ (Raymond Cho) களமிறங்கியுள்ளார்.
இதில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் பாரிய பிரசாரத்தையும் நேற்று முன்னெடுத்திருந்தனர்.
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜய் தனிகாசலத்தின் பிரதிநிதி, இந்த வைபவத்தில் விஜய் தனிகாசலத்தின் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.
ஸ்காபரோ தமிழ் மக்களின் நலனுக்காக ரேமண்ட் ஷோ தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்
”ரேமண்ட் ஷோ அவர்கள் ஸ்காபரோவின் உண்மையான அடையாளமாக திகழ்கிறார். அவர் நகர சபை உறுப்பினராக இருந்த போதும், ஒன்டாரியோ மாநில சட்ட மன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் தமிழ்ச் சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஸ்காபரோவில் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ரேமண்ட் ஷோ சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறார். அவருடன் சேர்ந்து சமூகத்திற்காக சில முக்கியமான வெற்றிகளை எட்டியதில் நானும் பெருமையடைகிறேன். முதன்முறையாக ஸ்காபரோவில் மருத்துவக் கல்லூரியைக் கொண்டு வருவதிலும் புதிய பேர்ச்மவுண்ட் மருத்துவமனையைக் கட்டுவதிலும், செஞ்சனரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை விரிவாக்கம் செய்வதிலும் மற்றும் ஸ்காபரோ சப்வே விஸ்தரிப்புத் திட்டங்களிலும் ரேமண்ட் ஷோ, ஆர்வத்துடனும் உறுதியுடனும் செயல்பட்டுள்ளார். ரேமண்ட் ஷோ ஒருபோதும் ஓய்வதில்லை. அவரின் அசாதாரண ஊக்க்ததுடன் ஸ்காபரோ மக்களுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறார். அனைவரும் இணைந்து ரேமண்ட் ஷோ அவர்களையும், தலைவர் டக் போர்ட் அவர்களையும் வரும் தேர்தலில் வெற்றியடையச் செய்வோம்!” என்று குறிப்பிட்டார்.
தமிழர்கள் மத்தியில் ரேமண்ட் ஷோ பெரும் ஆதரவைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.