ரஷ்யாவிற்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
புதிய வரிகள் குறித்து ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே சீனா இதனை தெரிவித்துள்ளது.
இருநாடுகளும் பல்தரப்புஅரங்குகளில் பரஸ்பரம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்தவேண்டும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கேய் லவ்ரோவை சந்தித்த பின்னர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இரு நாடுகளும் சர்வதேச உறவுகளிற்கான புதிய மாதிரியை உருவாக்குகின்றன என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின் வரி அதிகரிப்பு அச்சுறுத்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சு அனைத்து ஒருதலைப்பட்சமான சட்டவிரோத தடைகளையும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது.
வரிப்போரில் வெற்றியாளர்கள் எவரும் இல்லை வற்புறுத்தலும் அழுத்தமும் பிரச்சினைகளை தீர்க்காது என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.