ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கம்சட்கா கடற்கரையின் ஒரு பகுதியை 19 சென்டிமீட்டர் (7.5 அங்குலம்) வரை சுனாமி அலை பாதிக்கக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்தனர்.
“பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக, 19 சென்டிமீட்டருக்கு மேல் உயரமில்லாத சுனாமி அலை அலூஷியன், உஸ்ட்-கம்சாட்ஸ்கி, பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி ஆகிய மாவட்டங்களை அடையக்கூடும்” என்று கம்சட்கா சுனாமி எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
“எதிர்பார்க்கப்படும் அலைகளின் உயரம் குறைவாக உள்ளது, ஆனால் நீங்கள் இன்னும் கரையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்” என்று ரஷ்யாவின் அவசர சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் இந்த நடுக்கத்தை 6.8 ரிக்டர் அளவில் பதிவிட்டுள்ளது.
நிலநடுக்கத்தை 7.0 ஆக அளந்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பு, நிலநடுக்கத்திற்குப் பிறகு ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
ஒரு வாரத்திற்குள் ரஷ்யாவிற்கு அருகில் இருந்து பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஜூலை 30 அன்று, இப்பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து பல வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.