“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்வித சவாலும் இல்லை.” – என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஊழல், மோசடியுடன் ஈடுபட்டவர்களுடன் ஒன்றிணையமாட்டோம் எனக் கூறிய சஜித் தற்போது ரணிலுடன் இணைவது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி வெற்றியளித்துள்ளது என மேற்படி கட்சிகளின் உறுப்பினர்கள் அறிவித்துவருகின்றனர்.
இந்த கூட்டணியானது அரசாங்கத்துக்கு சவால்மிக்கது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“ நெருக்கடி நிலையில் இருந்து நாடு மீள்வதற்கு அரசாங்கத்தக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என எதிரணிகள் அறிவிப்புகளை விடுத்தாலும், அவ்வாறு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை.
நெருக்கடியை பயன்படுத்தி அரசியல் நடத்தும் செயலிலேயே எதிரணி ஈடுபட்டுள்ளது. ரணிலும், சஜித்தும் ஒன்றிணையப் போகின்றார்களாம். இவர்கள் கூட்டணி அமைத்தால்கூட எமக்கு சவால் இல்லை.” – எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
பிணைமுறி மோசடியாளர்களுடன் இணையமாட்டோம் என அறிவித்த சஜித், தற்போது எந்த அடிப்படையில் கூட்டு சேர்ந்துள்ளார்? இவர்கள் கூட்டு சேர்ந்தால்கூட தலைமைத்துவப் பிரச்சினை உருவாகி, கூட்டணி சிதையும்.
அரசாங்கம் முன்னோக்கி செல்லும். மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும்.” எனவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் குறிப்பிட்டார்.

