” பட்டலந்த அறிக்கையை மையமாகக்கொண்டு நாடாளுமன்றத்தில் தமக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தரான துமிந்த நாகமுவ வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
” பட்டலந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை பொறுப்பற்ற விதத்தில் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். அறிக்கை எங்கே என கேட்டவர், சபையில் அது முன்வைக்கப்பட்ட பின்னர் பழைய அறிக்கை பற்றி விவாதம் எங்கு நடப்பதில்லை என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார். பட்டலந்த விவகாரத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே அவர் பல்வேறு கதைகளை உருவாக்கிவருகின்றார்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பட்டலந்த அறிக்கை தொடர்பில் இரு நாட்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. விவாதம் நடக்கட்டும், அதன்பிறகு அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குடியுரிமையை பறிப்பதற்கான சட்டவியூகம் பற்றி பரிந்துரையொன்று உள்ளது.
பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு, நாடாளுமன்றத்திலுள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை இரத்து செய்யப்பட வேண்டும். வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.” எனவும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.