யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்கராஸ்,ஜோகோவிச் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றயைர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 20-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் மோதினார். இதில் அல்கராஸ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
7-ம் நிலை வீரரும், 4 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் நுழைந்தார். இறுதிப் போட்டியில் நுழைவதற்கான அரை இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், அல்கராஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான பெலாரஸின் அரினா சபலென்கா, தரவரிசையில் 60-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரசோவாவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக மார்க்கெட்டா வோண்ட்ரசோவா விலகினார். இதனால் அரினா சபலென்கா அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 62-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவாவுடன் மோதினார். இதில் ஜெசிகா பெகுலா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரை இறுதி சுற்றில் ஜெசிகா பெகுலா, அரினா சபலென்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
கால் இறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி: ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ், டிம் பியூட்ஸ் ஜோடியுடன் மோதியது. 1 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கிராண்ட் ஸ்லாம் தொடரில் யுகி பாம்ப்ரி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். கால் இறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடியானது குரோஷியாவின் நிகோலா மெக்டிக், அமெரிக்காவின் ராஜீப் ராம் ஜோடியுடன் மோதுகிறது.
மாயா தோல்வி: மகளிர் ஜூனியர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, பிரிட்டனின் ஹன்னா க்ளூக்மேனுடன் மோதினார். 2 மணி நேரம் 2 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மாயா 7-6 (7-1) 4-6 3-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.